
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை என கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் எனக் கூறினார்.
அமித்ஷாவின் இந்த கருத்து அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுயத்து, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட இந்தியா கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் எம்பிக்களிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
ராகுல் காந்திதான் தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டிய நிலையில், அவர் மீது நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பாஜக எம்பிக்கள் புகார் அளித்தனர்.
மேலும், அமித் ஷா பேச்சை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.