"பிறந்தநாள் பார்ட்டிக்காக வாடகைக்கு எடுத்த கார்..." - நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக காரை எடுத்துச் சென்ற நிலையில், அதிகாலை நேரத்தில் அந்த கார் அடுத்தடுத்து மூன்று வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது.
17-year-old minor Audi driver
17-year-old minor Audi driver
Published on: 
Updated on: 
2 min read

டெல்லியில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு கார், சில மணி நேரங்களிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது சிறுவன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.16 ஆயிரம் செலுத்தி ஒரு இரவுக்கு Audi காரை வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக காரை எடுத்துச் சென்ற நிலையில், அதிகாலை நேரத்தில் அந்த கார் அடுத்தடுத்து மூன்று வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சாலையில் சென்ற 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் டெல்லியின் கிஷன்கர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கிஷன்கர் பகுதியில் உள்ள சிஎன்ஜி பம்ப் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. போலீஸ் தரப்பின் முதற்கட்ட தகவலின்படி, சிறுவன் Audi காரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து மூன்று வாகனங்களில் மோதியது. இதன் தாக்கத்தில் அப்பகுதியில் நடந்து சென்ற உமாசங்கர் என்ற 45 வயது நபரும் படுகாயமடைந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த உமாசங்கர் உடனடியாக மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள ஜேபிஎன் அபெக்ஸ் டிராமா சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். உயிரிழந்தவர் கிஷன்கர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், Audi காரை ஓட்டியதாக கூறப்படும் 17 வயது சிறுவனை பிடித்துள்ளனர். பின்னர் அவர் Juvenile Justice Board எனப்படும் சிறார் நீதிக் குழுமத்தின் முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. விபத்தில் தொடர்புடைய Audi உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தற்போது முக்கியமாக விசாரிக்கப்படும் விஷயம், 17 வயது சிறுவனுக்கு எப்படி Audi கார் வாடகைக்கு கிடைத்தது என்பதுதான். ஆன்லைன் செயலி மூலம் ரூ.16 ஆயிரம் செலுத்தி காரை முன்பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், காரை வழங்குவதற்கு முன்பு அந்த நபரின் வயது மற்றும் ஓட்டுநர் உரிமம் சரியாக சரிபார்க்கப்பட்டதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

வாடகை கார் நிறுவனத்திடமிருந்து முன்பதிவு விவரங்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வயது சரிபார்ப்பு நடைமுறை உள்ளிட்ட தகவல்களை போலீசார் கேட்டுள்ளனர்.

சிறுவனுக்கு காரை வழங்கிய நிறுவனத்தின் பங்கும் தற்போது போலீசாரின் விசாரணையில் உள்ளது. விதிமுறைகளின்படி வயது மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டிருந்தால், இத்தகைய சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுகிறது.

அதேநேரம், காரை வழங்கும் நடைமுறையில் நிறுவனத்தின் தரப்பில் ஏதேனும் தவறு அல்லது விதிமீறல் இருந்தது விசாரணையில் தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது Audi காருக்குள் சிறுவன் மட்டும் இருந்தாரா அல்லது அவருடன் நண்பர்கள் உள்ளிட்ட வேறு நபர்களும் இருந்தார்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். காரில் பயணம் செய்ததாக கூறப்படும் அனைவரின் அடையாளம் மற்றும் வயதை உறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும், விபத்துக்கு முன்பு காரை சிறுவன்தான் தொடர்ந்து ஓட்டினாரா அல்லது வேறு யாராவது ஓட்டினார்களா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்து நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளும் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துக்கு முன்பு கார் எந்த வழியாக வந்தது, அதன் வேகம் எப்படி இருந்தது, எப்போது கட்டுப்பாட்டை இழந்தது, மோதல் எப்படி நடந்தது என்பன குறித்து போலீசார் பல்வேறு ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கிஷன்கர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் 281வது பிரிவு, அதாவது கவனக்குறைவான அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், 106(1), அதாவது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மோட்டார் வாகனச் சட்டத்தின் 3/181 பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தொடங்கியதாக கூறப்படும் இந்த இரவு பயணம், இறுதியில் ஒரு குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், சிறார்களுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கும்போது வயது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

விசாரணை முடிவில் சிறுவன் வாகனத்தை எவ்வாறு பெற்றார், விபத்துக்கு முன்பு காரில் யார் யார் இருந்தனர், வாடகை நிறுவனம் தனது விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com