

ஹரியானாவில் ஜனவரி 2020 முதல் ஜனவரி 2026 வரையிலான ஆண்டுகளில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 18,000 பேர் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர் என்று மார்ச் 18, புதன்கிழமை அன்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை அன்று ஹரியானா மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பொது சுகாதாரம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், மாநிலத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 18,000 பேர் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு முதல் இன்று வரை ஹரியானாவில் 18-45 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக ஆண்டுவாரியாகவும் மாவட்டவாரியாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், இந்த மரணங்களுக்கும் கோவிட்-19 தொற்று அல்லது கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய அரசு ஏதேனும் ஆய்வு அல்லது கணக்கெடுப்பை நடத்தியுள்ளதா?, அப்படியானால் அந்த ஆய்வு அல்லது கணக்கெடுப்பின் முடிவுகள் மற்றும் இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் தெரிந்துகொள்ளக் கோரியிருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு, அரசு இந்தத் தகவலை அவையில் எழுத்துப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டது.
மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2020-ல் 2,394, 2021-ல் 3,188, 2022-ல் 2,796, 2023-ல் 2,886, 2024-ல் 3,063, 2025-ல் 3,255 மற்றும் ஜனவரி 2026-ல் 391 என (மொத்தம் 17,973) மரணங்கள் பதிவாகியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டின் AIIMS-ICMR ஆய்வின்படி , 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான இந்தியர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு, கண்டறியப்படாத இதய நோயே முக்கியக் காரணமாக உள்ளது. இந்த மரணங்களில் 42.6 சதவீதம் இருதய சம்பந்தமான பிரச்சனைகளால் ஏற்பட்டவை என்றும், மீதமுள்ள, காரணம் அறியப்படாத மரணங்கள், பரம்பரையாக வரும் இதயத்தின் மின்சாரக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இதய நோய் என்பது முதியவர்களுக்கு மட்டுமேயான கவலையளிக்கக்கூடிய ஒன்றாக கருதப்பட்டாலும், ஹரியானாவின் தரவுகள் இன்றைய மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும், தரபோதையா வாழ்வியல் முறைக்குறித்த கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.