28 நாள் Recharge-க்கு பதிலாக 30 நாள் Validity... மொபைல் பயனர்களுக்கு வரப்போகும் முக்கிய மாற்றம்!

ராகவ் சத்தா வரவேற்று, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியும் தேர்வு சுதந்திரமும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்
30-day validity recharge
Published on: 
Updated on: 
2 min read

பலரும் மாதம் ஒருமுறை மொபைல் ரீசார்ஜ் செய்து வந்தாலும், நடைமுறையில் பல “மாதாந்திர” திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்களாகவே இருந்தது. இதனால் ஒரு ஆண்டில் 12 முறை ரீசார்ஜ் செய்தால் போத வேண்டிய நிலையில், சில பயனர்கள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ப்ரீபெய்ட் மொபைல் பயனர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கும் வகையில் புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், Telecom Consumer Protection (Thirteenth Amendment) Regulations, 2026 என்ற புதிய விதிமுறைகளை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதை ராஜ்யசபா உறுப்பினர் ராகவ் சத்தா வரவேற்று, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியும் தேர்வு சுதந்திரமும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய மாற்றங்களில் முக்கியமானது 30 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள். இதுவரை 28 நாட்கள் கொண்ட திட்டங்களை “மாதாந்திர ரீசார்ஜ்” என பல நிறுவனங்கள் வழங்கி வந்தன. 28 நாட்கள் கொண்ட ஒரு திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது, 12 மாத காலத்துக்குள் கூடுதலாக ஒரு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. 30 நாள் திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கும் பட்சத்தில், ஒரு வருடத்தில் தேவையான ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 13-ல் இருந்து 12 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அனைவருக்கும் அதிக அளவு மொபைல் டேட்டா தேவைப்படுவதில்லை. குறிப்பாக வயதானவர்கள், சாதாரணமாக அழைப்புகள் மேற்கொள்பவர்கள் மற்றும் மொபைல் இணையத்தை அதிகம் பயன்படுத்தாதவர்கள், தேவையில்லாத டேட்டாவுக்காக பணம் செலுத்த வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, Voice மற்றும் SMS மட்டும் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களுக்கும் புதிய விதிமுறைகள் வழிவகுக்கின்றன.

அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான வேலிடிட்டி கொண்ட Voice-SMS-only Special Tariff Vouchers எனப்படும் திட்டங்களை வழங்க வேண்டும். ஏற்கனவே Voice, SMS மற்றும் Data இணைந்த திட்டங்கள் எந்தெந்த கால அளவில் உள்ளனவோ, அதற்கேற்ப டேட்டா இல்லாத Voice-SMS திட்டங்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். டேட்டா சேவை இல்லாததால், அத்தகைய திட்டங்களின் கட்டணத்திலும் உரிய அளவு குறைப்பு செய்யப்பட வேண்டும் என்று விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய ஒரு திட்டத்தையும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒருவர் ஒரு மாதத்தின் 15ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால், அடுத்தடுத்த மாதங்களிலும் அதே தேதியை அடிப்படையாகக் கொண்டு திட்டத்தை புதுப்பிக்கக்கூடிய வசதி கிடைக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வேலிடிட்டி எப்போது முடியும் என்பதை நினைவில் வைத்திருப்பதும் எளிதாகும்.

இந்த விவகாரம் குறித்து ராகவ் சத்தா, ப்ரீபெய்ட் பயனர்களின் ரீசார்ஜ் முறையில் அதிக நெகிழ்வுத்தன்மை தேவை என்று முன்பு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக மார்ச் 11ஆம் தேதி, 28 நாள் ரீசார்ஜ் முறையும் டேட்டா தேவையில்லாதவர்களுக்கான குறைந்த கட்டணத் திட்டங்களின் பற்றாக்குறையும் குறித்து அவர் பிரச்சினையை முன்வைத்ததாக கூறியுள்ளார். எனினும், புதிய விதிமுறைகள் வந்துள்ளதால் அனைத்து மொபைல் நிறுவனங்களின் தற்போதைய திட்டங்களும் உடனடியாக ஒரே மாதிரியாக மாறிவிடும் என்று அர்த்தமில்லை. நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களையும் கட்டண அமைப்பையும் புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். எந்த நிறுவனத்தில் எந்த விலையில் 30 நாள் அல்லது Voice-SMS-only திட்டங்கள் கிடைக்கும் என்பது அந்த நிறுவனங்களின் புதிய திட்ட அறிவிப்புகளின் அடிப்படையில்தான் தெளிவாகும்.

ப்ரீபெய்ட் பயனர்களைப் பொறுத்தவரை, முக்கிய மாற்றம் “தேவையான சேவைக்கு மட்டும் பணம் செலுத்தும்” வாய்ப்பு அதிகரிப்பதுதான். டேட்டா அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு வழக்கமான Data திட்டங்கள் தொடரும் நிலையில், அழைப்பு மற்றும் SMS மட்டுமே தேவையானவர்களுக்கு தனியான தேர்வுகள் கிடைக்க உள்ளன. அதேபோல், 30 நாள் வேலிடிட்டி கிடைப்பதால் மாதாந்திர ரீசார்ஜ் என்ற பெயரில் 28 நாட்களுக்கு மட்டுமே சேவை பெறும் நிலையும் படிப்படியாக மாறக்கூடும். மொபைல் ரீசார்ஜ் என்பது கோடிக்கணக்கான மக்களின் மாதாந்திர செலவுகளில் ஒன்றாக இருப்பதால், திட்டங்களின் கால அளவு மற்றும் கட்டணத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட பயனர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம், பயனர்கள் தங்களுடைய பயன்பாட்டுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com