மாணவர் போராட்டங்களுக்கு கடிவாளம்! ஜனநாயகத்தில் உண்ணாவிரதம், தர்ணாவுக்கு இடமில்லை என உயர் நீதிமன்றம் அதிரடி!

அந்த நாடகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிசா தாமஸை அவமதிக்கும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவர் போராட்டங்களுக்கு கடிவாளம்! ஜனநாயகத்தில் உண்ணாவிரதம், தர்ணாவுக்கு இடமில்லை என உயர் நீதிமன்றம் அதிரடி!
Published on: 
Updated on: 
2 min read

கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் நடவடிக்கைகளுக்கான களமாக மாறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் தர்ணா, உண்ணாவிரதம், சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களுக்கு இடமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக விதிகளைப் பின்பற்றாமல் தேர்வு எழுத அனுமதி கோரிய மாணவர்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களைப் பற்றியது. அப்பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 16 மாணவர்கள் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பைச் (SFI) சேர்ந்தவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக இந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி தொடர்பான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதற்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வீதி நாடகம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். அந்த நாடகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் சிசா தாமஸை அவமதிக்கும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, அவர்களுக்கான பருவத் தேர்வுகள் நெருங்கின. ஆனால், பல்கலைக்கழக விதிகளின்படி தேர்வு எழுதுவதற்குத் தேவையான குறைந்தபட்ச வருகைப் பதிவை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. இதனால் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 16 மாணவர்களும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி பருவத் தேர்வில் பங்கேற்க அனுமதி அளித்தார். இந்த அனுமதி அவர்களுக்கு நிரந்தர உரிமையை வழங்காது என்றும், வழக்கின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அக்டோபர் 30ஆம் தேதி இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் எஸ். முரளி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின்போது, மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் மனுவில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, குறைந்தபட்ச வருகைப் பதிவு, உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி மற்றும் வருகைப் பற்றாக்குறையைச் சரிசெய்ய அனுமதி கோரிய விவரங்கள் எதுவும் முறையாக முன்வைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்ட விதிகளுக்கும் பல்கலைக்கழக ஒழுங்குமுறைகளுக்கும் எதிராகச் செயல்படுமாறு எந்தவொரு அதிகார அமைப்பையும் நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றனர். இதன் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்தான் தற்போது முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் நடவடிக்கைகள், தர்ணா, உண்ணாவிரதம், சத்தியாகிரகம் போன்றவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஜனநாயகத்தில் இடமில்லை என்றும், குறிப்பாகக் கல்வி நிறுவனங்களில் இத்தகைய செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டவை; அரசியல் நடவடிக்கைகளுக்காக அல்ல என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். அரசியல் கட்சிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை முடக்கவோ, கல்வி கற்க விரும்பும் மற்ற மாணவர்களின் உரிமைகளைப் பாதிக்கவோ கூடாது என்றும் குறிப்பிட்டனர். இந்தத் தீர்ப்பு, கல்வி நிறுவனங்களில் மாணவர் போராட்டங்கள், அரசியல் தலையீடு மற்றும் கல்வி ஒழுக்கம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் உரிமையும், கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கடமையும் எந்த அளவுக்கு சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற கேள்வியையும் இந்த வழக்கு எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.