

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் திருமணம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அவரது மனைவி உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட 26 வயதான டேவ் ஃபிஜி, டெல்டா ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றி வந்தார். அவர் தனது காதலியான ஜெஸ்னியை கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜியாவின் டாவ்சன்வில்லில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண விழாவில் மணந்தார். இந்த திருமணத்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, புதுமணத் தம்பதியினர் ஹனிமூன் பயணத்தின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். டாவ்சன்வில்லில் உள்ள திருமண இடத்திலிருந்து அட்லாண்டா நகரை நோக்கி புறப்பட்ட ராபின்சன் R66 ஹெலிகாப்டரில் டேவ், அவரது மனைவி ஜெஸ்னி மற்றும் விமானி பயணம் செய்தனர்.
ஆனால் புறப்பட்ட சில நேரங்களிலேயே ஹெலிகாப்டர் தனது இலக்கை அடையாமல், டாவ்சன் கவுண்டியில் உள்ள மவுண்ட் வெர்னான் டிரைவ் அருகேயுள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் டேவ் ஃபிஜியும் ஹெலிகாப்டர் விமானியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்திற்குப் பிறகு சிதைந்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினருக்கு பல மணி நேரம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த நிலையில் இருந்த ஜெஸ்னி, சுமார் ஆறு மணி நேரம் விபத்து நடந்த இடத்திலேயே சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மீட்புக் குழுவினர் அவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய டேவின் தந்தை ஜார்ஜ் ஃபிஜி, “என் மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். திருமண நாளில் அவனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை கொண்டாடிக் கொண்டிருந்தான். ஆனால் சில மணி நேரங்களில் இப்படி ஒரு சோகமான செய்தியை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது” என்று கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், புறப்படும் முன்பு நிலவிய மோசமான வானிலை குறித்து டேவ் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். விமானியாக இருந்த டேவ், குறைந்த நிலைமையில் பறப்பது குறித்து விமானியிடம் எச்சரித்ததாகவும், அதற்கு விமானி அதிக உயரத்தில் பறப்பதாக பதிலளித்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது. திருமணமான சில மணி நேரங்களிலேயே ஏற்பட்ட இந்த சோகம், குடும்பத்தினரையும் நண்பர்களையும் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்