கிரிக்கெட் மைதானத்தில் சோகம்.. டீ குடித்துக் கொண்டிருந்த அம்பயர் பரிதாப மரணம்! ஒரே நிமிடத்தில் உயிரைப் பறித்த தேனீக்கள்!

தேனீக்கள் கூட்டம் ஒட்டுமொத்தமாக அவரைச் சூழ்ந்து கொண்டு கொட்டியதாக...
கிரிக்கெட் மைதானத்தில் சோகம்.. டீ குடித்துக் கொண்டிருந்த அம்பயர் பரிதாப மரணம்! ஒரே நிமிடத்தில் உயிரைப் பறித்த தேனீக்கள்!
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் உள்ள சப்ரு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, தேனீக்கள் தாக்கியதில் மூத்த நடுவர் மாணிக் குப்தா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றி வந்த இவர், கான்பூர் கிரிக்கெட் சங்கத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகவும், மாநில அளவிலான நடுவர் குழுவில் இடம்பெற்றவராகவும் அறியப்பட்டவர்.

இந்தத் துயரச் சம்பவம் நடந்த அன்று, மாணிக் குப்தா தனது போட்டியை முடித்துவிட்டு, மற்றொரு மைதானத்தில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சக நடுவரைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார். வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடைவேளையின் போது (Drinks break), இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் அங்கிருந்த அனைவரையும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கின.

திடீரென நிகழ்ந்த இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால், வயது முதிர்வு காரணமாக மாணிக் குப்தாவால் மற்றவர்களைப் போல வேகமாக ஓட முடியவில்லை. தப்பிச் செல்ல முயன்றபோது அவர் எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேனீக்கள் கூட்டம் ஒட்டுமொத்தமாக அவரைச் சூழ்ந்து கொண்டு கொட்டியதாக அவரது சகோதரர் அமித் குமார் குப்தா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து போன அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த மற்ற வீரர்களும், நடுவர்களும் காயமடைந்தனர். தனது வாழ்நாள் முழுவதையும் கிரிக்கெட் விளையாட்டுக்காகவும், நடுவர் பணிக்காகவும் அர்ப்பணித்த ஒரு சிறந்த மனிதரை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com