பாம்பே படத்தில் நாயகி மனிஷா கொய்ராலாவை பார்ப்பதற்காக நாயகன் அரவிந்த்சாமி புர்கா அணிந்தபடி படகில் செல்வது போல காட்சிகளை மக்கள் பார்த்திருப்பதுண்டு. ஆனால் இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே காதலியை பார்ப்பதற்கு புர்கா அணிந்து சென்று இறுதியில் தர்மஅடியை வாங்கிக் கொண்டவர்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரான சந்த் அலியாஸ் புரா.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதபாத்தில் பிபல்சனா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் புர்கா அணிந்தவாறு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது நடை, உடை, பாவனையில் எதிலுமே பெண்ணுக்கான நளினம் இல்லையே என அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. புர்கா அணிந்தவாறு வந்து குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என மக்கள் எண்ணினர்.
இதையடுத்து புர்கா அணிந்தவரை அழைத்து சோதனை செய்தவர்கள், முகத்தைக் காட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து புர்காவை கழற்றியபோது, அவர் பெண்ணல்ல, ஆண் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இதையடுத்து பொதுமக்கள் விசாரணை நடத்தியதில், தனது காதலியை பார்ப்பதற்காக மாறு வேடத்தில் வந்திருப்பதாக அந்த இளைஞர் கூறினார்.
மேலும் புர்காவை முற்றிலும் அகற்றிப் பார்த்தவுடன், இளைஞரிடம் துப்பாக்கி இருந்ததால் சுற்றி இருந்தவர்கள் மிரண்டு போயினர். ஆனால் அந்த கைத்துப்பாக்கியை ஆய்வு செய்தபோது, அது துப்பாக்கி வடிவிலான சிகரெட் லைட்டர் என்பது தெரியவந்தது.
உடனே சம்பவம் குறித்து மொரதாபாத் பகுதி காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. காதலிக்கு சர்ப்ரைஸ் தரும் எண்ணத்தில் மாறுவேடத்தில் சென்றாரா? அல்லது காதலியை கொலை செய்யும் நோக்கில் இவ்வாறான செயலில் இறங்கினாரா? என்ற கேள்விகள் எழுந்தது.
பின்னர் இளைஞரிடம் இருந்து துப்பாக்கி போன்ற லைட்டரை பறிமுதல் செய்த அப்பகுதி மக்கள், குனிய வைத்து கும்மாங்குத்து குத்தி போலீசிடம் ஒப்படைத்தனர்.