
குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12ஆம் தேதி துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த 241 பேரில் ஒருவர் தவிர மற்றவர்கள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய ஒரே பயணி பிரிட்டிஷ் – இந்திய நபர் ஆவார். மேலும், அந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விழுந்ததில், மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துப் புலனாய்வு அமைப்பு (AAIB) முழுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். விசாரணை AAIB இயக்குநர் ஜெனரல் தலைமையில் நடந்து வருகிறது.
விபத்து நடந்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் கருப்பு பெட்டி (Black Box) ஜூன் 13ஆம் தேதி மீட்கப்பட்டது. விமானம் மோதி விழுந்த விடுதியின் கூரையில் இருந்து கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டது. இதில் ‘Cockpit Voice Recorder’ (CVR) மற்றும் ‘Flight Data Recorder’ (FDR) என இரண்டு முக்கிய சாதனங்கள் உள்ளன. CVR மூலம் விமான அறையில் நடந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படும். FDR மூலம் விமானத்தின் பறப்பு உயரம், வேகம் மற்றும் விமானி செலுத்திய முறைகள் உள்ளிட்ட தகவல்கள் சுமார் 25 மணி நேரம் வரை சேமிக்கப்படும்.
இந்த சாதனங்களின் தரவுகள் டெல்லியில் உள்ள கருப்பு பெட்டி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு நவீன உபகரணங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 9ஆம் தேதி திறக்கப்பட்ட ரூ. 9 கோடி மதிப்புள்ள இந்த ஆய்வு மையத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீட்கப்பட்டு முதல்கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் AAIB சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.