
மாநிலங்களவையில் உரையாற்றியிருந்த அமித்ஷா, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என கோஷமிடுவது பேஷனாகிவிட்டதாக குறிப்பிட்டார். அமித்ஷாவின் இந்த பேச்சு, அம்பேத்கரை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமித்ஷாவை பாதுகாப்பதற்கு பதில், அம்பேத்கரை அவமதித்தவர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்கியிருக்க வேண்டும் என ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலைப்படுவோர், அம்பேத்கரின் பெயரைத்தான் சொல்வார்கள் என தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, அம்பேத்கர் குறித்த தன்னுடைய பேச்சுகள் AI தொழில்நுட்பம் மூலம் காங்கிரஸ் கட்சியால் திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீதான விவாதங்களின் போது அது நிரூபணம் ஆனதாகவும் குறிப்பிட்டார். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல என பேசிய அமித்ஷா, அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது மோடி அரசாங்கமே எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை 2 முறை தோல்வி அடையச் செய்ததாக குறிப்பிட்ட அமித்ஷா, அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் உண்மையை மறைக்க முயற்சிப்பதகாவும், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நேரு, இந்திரா காந்தி எதிர்த்ததாகவும் கூறினார். மேலும், தரவுகளின் அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும் என அமித்ஷா தெரிவித்தார்.