ஆந்திராவை அச்சுறுத்தும் ‘அர்னாப்’ புயல்! 5.7 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் – 1,763 நிவாரண முகாம்கள் தயார்!

அடிப்படை வசதிகளை வழங்க மாநிலம் முழுவதும் 1,763 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன...
Cyclone Arnab Andhra Pradesh
Cyclone Arnab Andhra Pradesh
Published on: 
Updated on: 
2 min read

ஆந்திர மாநிலத்தில் தீவிரமடைந்து வரும் ‘அர்னாப்’ புயலை எதிர்கொள்ள மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயலால் சுமார் 5.7 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், 16 மாவட்டங்களில் உள்ள 2,460 கிராமங்கள் மற்றும் 92 நகர்ப்புறப் பகுதிகள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது, மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.ஆந்திரப் பிரதேசத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, 2,107 கிராமங்கள் மற்றும் வார்டுகளைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மருத்துவ உதவி அவசியமாகத் தேவைப்படக்கூடிய கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,711 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பான மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்களுக்குத் தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க மாநிலம் முழுவதும் 1,763 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவசரகால மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக, 11 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையான SDRF குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தைப் பொறுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட மற்றும் மண்டல அளவில் 2,907 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக 3,185 அதிகாரிகள் களத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் முதல் கடலோரச் சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உடனடியாக நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால், மின் கம்பிகள் மற்றும் விழுந்த மரங்களின் அருகே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுதல், வெள்ள நீர் தேங்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து ‘மன மித்ரா’ (Mana Mitra) வாட்ஸ்அப் சேவை மூலம் 9552300009 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு மற்றும் மின் கம்பி சேதம் தொடர்பான புகார்களுக்கு 1912 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆந்திர மாநில அரசு பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com