
பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு, பெங்களூரு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் லஞ்சம் கொடுத்து, சொகுசு வசதிகளை பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.
அதே சமயம், சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்று, ஷாப்பிங் செய்து விட்டு வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இந்த வழக்கின் ஐந்தாவது மற்றும் ஆறாவது குற்றவாளியாக சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருமுறை ஆஜராவதை தவிர்த்து வந்த சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிபதி ராதாகிருஷ்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் இளந்தமிழ் ஆர்வலன், வழக்கு விசாரணையில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு பெறப்பட்டு, தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது எப்படி என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும், இது குறித்து, கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.