11,200 மெகாவாட் பிரம்மாண்ட அணைத் திட்டம்... எதிர்ப்புக்கு மத்தியில் அமித் ஷா கொடுத்த முக்கிய உறுதி!

மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்...
Amit Shah Project Assurance
Amit Shah Project Assurance
Published on: 
Updated on: 
2 min read

இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அருணாச்சலப் பிரதேசத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள 11,200 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட நீர்மின் திட்டம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உள்ளூர் மக்களும் பழங்குடியின அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான உறுதியை அளித்துள்ளார்.

சியாங் அப்பர் மல்டிபர்பஸ் திட்டம் (SUMP) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் ஆற்றுப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 11,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி தேவைக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மூன்று நாள் பயணமாக அருணாச்சலப் பிரதேசம் சென்றுள்ள அமித் ஷா, அங்கு நடைபெற்ற காவல்துறைக்கான குடியரசுத் தலைவர் வண்ண விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது இந்தத் திட்டம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். சியாங் பகுதி மக்களின் கவலைகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், மாநில முதலமைச்சர் பெமா காண்டுவும் இந்த விவகாரம் தொடர்பாகத் தன்னிடம் விளக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, மாநிலத்தின் வருவாய் மற்றும் இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு நலன்களுக்கும் முக்கியமானது என்று அமித் ஷா குறிப்பிட்டார். அதே நேரத்தில், மக்களின் அச்சங்களைப் புறக்கணிக்க மாட்டோம் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

பழங்குடியின மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு அரசு மதிப்பளிப்பதாகக் கூறிய அவர், மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது உள்ளூர் மக்களின் முக்கியக் கவலையாக உள்ளது. இதனால் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமித் ஷாவின் பயணத்திற்கு முன்பாகவே, திட்டத்தை எதிர்க்கும் சில அமைப்புகள் அவருக்கு கடிதம் எழுதியிருந்தன. அதில், திட்டத்தை ரத்து செய்வதுடன், அதற்கான ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகளையும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி பாசிகாட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சில போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டும், தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர். பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்ப்பு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமானதாக அரசு கருதும் அணைத் திட்டம், மறுபுறம் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படுமோ என்ற மக்களின் அச்சம் என இந்த விவகாரம் தொடர்ந்து நீடிக்கிறது. அமித் ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறவுள்ள ஆலோசனைகள் இந்தப் பிரச்சினையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.