

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கப் போவதாக எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடுருவல் விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது வாக்காளர்கள் மத்தியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் அசாம் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ், இந்த முறையும் படுதோல்வியைச் சந்திக்கும் என என்டிடிவி ஆக்சிஸ் மை இந்தியா (NDTV-Axis My India) கணித்துள்ளது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டசபையில், பாஜக கூட்டணி 88 முதல் 100 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணிப்பின்படி, பாஜக தனித்து 70 முதல் 80 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். அதன் கூட்டணிக் கட்சிகளான ஏஜிபி (AGP) 7 முதல் 9 இடங்களையும், பிபிஎஃப் (BPF) 9 முதல் 11 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளது. மறுபுறம், எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கனவு கண்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெறும் 24 முதல் 36 இடங்களுக்குள் சுருங்கிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸைப் பொறுத்தவரை அதன் கூட்டணியில் அதிகபட்சமாக 22 முதல் 30 இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்றும், மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒற்றை இலக்க இடங்களிலேயே தவிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, ஆளும் பாஜக கூட்டணி 48 சதவீத வாக்குகளை அள்ளும் என்று தெரிகிறது. இதில் பாஜகவுக்கு மட்டும் 37 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 38 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது. பத்ருதீன் அஜ்மலின் ஏஐயுடிஎஃப் (AIUDF) கட்சி வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பாஜக போட்டியிட்ட 90 இடங்களிலும் அதன் வேட்பாளர்கள் வலுவான நிலையில் இருப்பதை எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன.
மற்ற இதர நிறுவனங்களின் கணிப்புகளும் பாஜகவுக்கே சாதகமாக உள்ளன. 'ஜன்மத்' எக்ஸிட் போல் பாஜக கூட்டணிக்கு 87 முதல் 98 இடங்களைக் கொடுத்துள்ளது. 'ஜேவிசி' மற்றும் 'மேட்ரிஸ்' போன்ற நிறுவனங்களும் பாஜக கூட்டணி 85 முதல் 101 இடங்கள் வரை பிடித்து அசால்ட்டாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது பிரச்சாரத்தில் அசாமின் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்போம் என்று கொடுத்த வாக்குறுதி மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளதையே இந்தக் கணிப்புகள் உறுதி செய்கின்றன.
பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி ஹிமந்த பிஸ்வா சர்மா மீது பல ஊழல் புகார்களை முன்வைத்த போதிலும், அவை எடுபடவில்லை என்பது புரிகிறது. பாஜகவின் வடகிழக்கு மாநில முகமாகத் திகழும் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதையே இந்த எக்ஸிட் போல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வரும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஒருவேளை இந்தக் கணிப்புகள் உண்மையானால், அசாமில் பாஜகவின் ஆதிக்கம் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.