இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஐஐடி, ஐஐஎம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள்கூட மன அழுத்தம், கல்விச் சுமை, தனிமை மற்றும் பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாக்கவும், தற்கொலைச் சம்பவங்களைத் தடுக்கவும் விடுதிகளின் கட்டமைப்பு முதல் கல்வி மதிப்பீட்டு முறை வரை பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டது. மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஆலோசனைகள் மற்றும் உதவி எண்கள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பதால், மாணவர்கள் வாழும் சூழலிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதன்படி, கல்லூரி விடுதிகளின் அமைப்பில் பல புதிய மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்கும் வகையில், விடுதிகளில் பொழுதுபோக்கு அறைகள், இசை மற்றும் நடனத்திற்கான தனி இடங்கள், அமைதியாக அமர்ந்து மனதைத் தெளிவுபடுத்துவதற்கான அறைகள், பசுமையான பகுதிகள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுவதற்கான திறந்தவெளி இடங்களை உருவாக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குள் பழகுவதற்கும், மனதில் உள்ள கவலைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஏற்ற சூழலை விடுதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதி வார்டன்களின் பொறுப்புகளிலும் மாற்றம் தேவை எனக் குழு தெரிவித்துள்ளது. மாணவர்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது மட்டுமே வார்டன்களின் வேலையாக இருக்கக்கூடாது. அவர்கள் மாணவர்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும், வாரத்தில் பல நாட்கள் விடுதிகளில் நேரம் செலவிட வேண்டும், மாணவர்களின் குறைகளைக் கேட்பதற்காகத் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தளத்திலும் மாணவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து உதவக்கூடிய பயிற்சி பெற்ற மாணவர் பிரதிநிதிகளை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி முறையிலும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் குழு வலியுறுத்தியுள்ளது. மாணவர்களின் திறமையை மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி மதிப்பீட்டுக் குறியீடான CPI மூலம் மட்டுமே கணக்கிடக் கூடாது. விளையாட்டு, கலை, சமூகப் பணிகள் மற்றும் பிற இணைப் பாடச் செயல்பாடுகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களுக்கும் அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவுகள் சீராக உள்ளனவா என்பதைக் கண்காணிக்கத் தனிக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனுடன், விடுதிகளில் கூடுதல் மனநல ஆலோசகர்கள், வருகை தரும் மனநல மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற சமூகப் பணியாளர்களை நியமிக்கவும், முதலாமாண்டு முதலே மாணவர்களின் மனநலத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்யவும், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிடவும் தனி கண்காணிப்பு முறையையும் உருவாக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் இந்தக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, ஜூன் 17ஆம் தேதி IIT, IIM, NIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதன் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. இருப்பினும், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களின் மதிப்பெண்களை விட அவர்களின் மனநலத்திற்கும் வாழ்க்கைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது என்பதை இந்த நடவடிக்கைகள் மீண்டும் உணர்த்துகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.