பிறந்த சில மணி நேரங்களிலேயே தாயின் காலால் எட்டி உதைக்கப்பட்டு, காலில் பலத்த முறிவுடன் உயிருக்கு போராடி வரும் ஏழு வார குட்டி யானையைக் காப்பாற்றுவதற்காக, நாடு முழுவதும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அசாமில் சிகிச்சை பெற்று வந்த ராஜா என்ற அந்தக் குட்டி யானையை, மேல் சிகிச்சைக்காக சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம் விமானம் மூலம் குஜராத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி ஆதரவுடன் இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் கோகாமுக் பகுதியில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ராஜா பிறந்தது. அப்போது அதன் தாய்க்கு வெறும் 11 வயதுதான். அனுபவம் இல்லாத இளம் யானையாக இருந்த தாய், குட்டி பிறந்த பிறகு ஏற்பட்ட பதற்றம் மற்றும் பயம் காரணமாக அதைத் தனது காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் குட்டி யானையின் பின்னங்காலில் உள்ள வலது தொடை எலும்பு முழுமையாக முறிந்தது. பிறந்த முதல் நாளிலேயே இந்த விபரீதம் ஏற்பட்டதால், மற்ற யானைக் குட்டிகளைப் போல தாயின் அருகில் நடக்கவோ, கால்களை ஊன்றி நிற்கவோ ராஜாவால் முடியவில்லை.
இதில் இன்னொரு சோகமான விஷயம் என்னவென்றால், பிறந்தவுடன் குட்டி யானைக்குக் கிடைக்க வேண்டிய தாய்ப்பாலும் கிடைக்கவில்லை. யானைக் குட்டிகளுக்கு பிறந்த உடனே கிடைக்கும் முதல் பால் மிகவும் முக்கியமானது. அதில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் சத்துகள் அதிகம் இருக்கும். ஆனால், ராஜாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் அதன் உடல்நிலை மேலும் பலவீனமடைந்தது.
குட்டியின் நிலையைப் பார்த்த அதன் உரிமையாளரும் பராமரிப்பாளர்களும் உதவி கோரி வன்தாரா அமைப்பைத் தொடர்புகொண்டனர். இதையடுத்து, அக்டோபர் 8ஆம் தேதி அந்த அமைப்பின் அவசர கால கால்நடை மருத்துவக் குழு அங்கு சென்றது. எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முழுமையாக முறிந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முறிந்த காலில் மாவுக்கட்டு மற்றும் ஆதரவுக் கட்டுகள் போடப்பட்டன. குட்டி எழுந்து நிற்கும்போது காயமடைந்த காலில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க பிரத்யேகத் துணை அமைப்பும் பயன்படுத்தப்பட்டது.
ராஜாவுக்குத் தாய்ப்பால் கிடைக்காததால், அதற்குப் பதிலாகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்பட்டது. புட்டி மூலம் பால் கொடுப்பது எப்படி என்பதையும் அதன் பராமரிப்பாளர்களுக்கு மருத்துவக் குழு கற்றுக்கொடுத்தது. அக்டோபர் 10ஆம் தேதி குட்டி யானை அதன் உரிமையாளரின் வீட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்தே மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், காயமடைந்த காலில் உடல் எடை படாமல் குட்டி மெதுவாக உடற்பயிற்சி செய்யும் வகையில் அதன் ஓய்விடத்திற்கு அருகே தண்ணீர்த் தொட்டியும் அமைக்கப்பட்டது.
கடந்த ஏழு வாரங்களாகப் போராடி வரும் ராஜாவின் உடல்நிலை தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. தாய்ப்பால் கிடைக்காதது, சுதந்திரமாக நடமாட முடியாதது போன்ற காரணங்களால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. வயிற்றுப்போக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் போன்ற பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், Klebsiella pneumoniae என்ற பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் படுத்திருப்பதால் தலையில் அழுத்தப் புண்களும் உருவாகியுள்ளன. தொப்புள் பகுதியில் குடலிறக்கமும் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்காக ஆன்டிபயாட்டிக் மருந்துகள், நரம்பு வழி திரவங்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் மற்றும் காயங்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், குட்டியின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதால், முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்றுவது அவசியமாகியுள்ளது.
இதற்காக அசாமின் கவுகாத்தியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள வன்தாரா யானைகள் மருத்துவமனைக்கு ராஜா விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறது. சாலை வழியாகப் பயணம் செய்தால் பல நாட்கள் ஆகும் என்பதால், குட்டியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விமானப் பயணம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணம் சுமார் நான்கு மணி நேரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட்டியின் உடல்நிலைக்கு ஏற்ற வகையில் பிரத்யேகப் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மென்மையான படுக்கை அமைத்து, முறிந்த காலுக்கு அசைவு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது இதயத் துடிப்பு, சுவாசம், உடல் வெப்பநிலை, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். தேவையான மருந்துகள், திரவங்கள் மற்றும் பால் ஆகியவையும் விமானத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஜாம்நகரை அடைந்ததும் ராஜாவுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எலும்பு சிகிச்சை, வலி கட்டுப்பாடு, ஊட்டச்சத்து சிகிச்சை மற்றும் மீண்டும் நடக்க உதவும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அதன் காயத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு வாழ்நாள் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்த் அம்பானி இதுபோன்ற அவசர விலங்கு மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆதரவளிப்பது இது மூன்றாவது முறையாகும். பிறந்த முதல் நாளிலிருந்து போராடி வரும் குட்டி யானை ராஜா மீண்டும் எழுந்து நடக்க வேண்டும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.