மதுரை எய்ம்ஸ்-ன் நிலை ? மத்திய அரசு விளக்கம்...!

மதுரை எய்ம்ஸ்-ன் நிலை ? மத்திய அரசு விளக்கம்...!
Published on
Updated on
1 min read

மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான பணிகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, நாடாளுமன்றத்தின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்?

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி 2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது தொடர்பாக கேள்வி எழுந்தது.

எழுத்துப்பூர்வமான கேள்வி:

இந்நிலையில் தொடர்ந்து 3 வது நாளாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர்கள் நாடு முழுவதும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறதா?  அப்படியெனில் மாநில வாரியாக எந்தெந்த மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ளது? மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் எய்ம்ஸ் பணிகளுடைய தற்போதைய நிலை? குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "பிரதான் மந்திரி சுவஸ்தாய சுரக்ஷா யோஜனா" திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் 2,475 மருத்துவ இடங்கள் அதிகரிக்கும் எனவும், மருத்துவ கல்லூரிகளில் 18,250 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் கூடுதல் படுக்கைகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த பதில் :

மேலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பணிகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு திட்டங்களும் பல்வேறு நிலைகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தின் மதுரையில் 100 மருத்துவ இடங்கள் மற்றும் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் குறித்து பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், முதலீட்டுக்கு முந்தைய பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், திட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்முறை மேலாண்மை ஆலோசகர்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் மருத்துவ படிப்புகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com