சீனாவின் ஆக்கிரமிப்பும்...எதிர்க்கட்சிகளின் கண்டனமும்...

சீனாவின் ஆக்கிரமிப்பும்...எதிர்க்கட்சிகளின் கண்டனமும்...
Published on
Updated on
2 min read

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீனா ராணுவம் இந்தியாவிற்குள் நுழைந்தது.  இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வீரர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இமேஜைக் காப்பாற்றவே:

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.  அவரது ட்விட்டர் பக்கத்தில், ”இந்திய ராணுவத்தின் வீரம் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.  எல்லையில் சீனாவின் நடவடிக்கைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, நாங்கள் பலமுறை அரசாங்கத்தை எச்சரித்து வருகிறோம்.  ஆனால் மோடி அரசு அவரது அரசியல் இமேஜைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இந்த விஷயத்தை நசுக்க முயற்சிக்கிறது. சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் விவாதிக்கவில்லை:

சமீபத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.  ”அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளது.  இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே பெரும் மோதல் நடந்ததை பல நாட்கள் அரசாங்கம் ரகசியமாக வைத்துள்ளது.  இதை ஏன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கவில்லை?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஒவைசி, ”அரசாங்கம் இதைக் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.  இந்திய ராணுவத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.  கால்வன் தாக்குதலின் போதும் ​​யாரும் இந்திய எல்லையில் நுழையவும் இல்லை, யாரும் நுழையவும் மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.  அவர் இன்னும் அதையே தான் சொல்வாரா?  ஏன் தகுந்த பதில் அளிக்கப்படவில்லை? பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் பதில் கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இந்த பிரச்சினையில் இருந்து அரசாங்கம் ஓடாது” என்றும் ஒவைசி மேலும் கூறியுள்ளார். 

நாட்டின் பெருமை:

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நமது ராணுவ வீரர்கள் நாட்டின் பெருமை.  அவர்களது துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்.  மேலும், அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் எங்கே?:

காங்கிரஸ் எம்பி ரந்தீப் சுர்ஜேவாலா ”இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நிலத்தை சீனா சட்டவிரோதமாக கையகப்படுத்தி வருகிறது.  பிரதமர் எங்கே? மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு பிரதமர் வந்து, பல்வேறு இடங்களில் சீன ராணுவம் இந்திய எல்லையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதன் சரியான நிலை குறித்து நாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அரசியலாக்க விரும்பவில்லை:

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் ட்விட்டரில் அவரது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.  ”மீண்டும் நமது இந்திய ராணுவ வீரர்கள் சீனர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.  நமது ஜவான்கள் துணிச்சலுடன் போராடினர்.  அவர்களில் சிலர் காயமடைந்தனர். தேசிய பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் நாட்டுக்கு துணையாக இருக்கிறோம், அதை அரசியலாக்க விரும்பவில்லை.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com