CJP செயற்பாட்டாளரின் தந்தை கொலை; பாஜக நிர்வாகி கைது - பின்னணி என்ன?

CJP செயற்பாட்டாளரின் தந்தை கொலை சம்பவத்தில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
CJP: பள்ளி வசதிகளை ஆய்வு செய்த செயற்பாட்டாளர்... தந்தை கொலை - பாஜகவின் சதியா?
CJP: பள்ளி வசதிகளை ஆய்வு செய்த செயற்பாட்டாளர்... தந்தை கொலை - பாஜகவின் சதியா?
Published on
Updated on
3 min read

கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்தது கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (CJP) எனக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தங்களின் இரண்டாவது முக்கிய நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து குரல் எழுப்பப் போவதாக CJP அறிவித்தது. இதற்காக ‘School Thik Karo’ என்ற பெயரில் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், CJP-யின் நடவடிக்கைகளைத் தடுக்க பல்வேறு முயற்சிகளில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

School Thik Karo
School Thik Karo

இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தானில் வெளிநபர்கள் உரிய அனுமதியின்றி பள்ளிகளுக்குள் செல்லக் கூடாது என அவசர அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது பள்ளி செயல்பாடுகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது, நேர்காணல்கள் நடத்துவது, ஒலிப்பதிவு செய்வது மற்றும் நேரலை ஒளிபரப்பு செய்வது ஆகியவற்றுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தின் ஒரு சிறிய கிராமப்புற தொடக்கப் பள்ளியில், "குடிநீர் சுத்தமாக இருக்கிறதா? கழிப்பறைகள் முறையாக இயங்குகின்றனவா? மாணவர்களுக்கு என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன?” எனக் கேள்வி எழுப்பிய 27 வயது CJP செயற்பாட்டாளர் ஷேக் அப்துல் ஹஃபீஸ் மீது 48 மணி நேரத்திற்குள் கொலை முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

வன்முறையாளர்களிடமிருந்து மகனைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை ஷேக் முகமது மாஃபிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாஜக பூத் நிலைத் தலைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தப்பிய ஹஃபீஸ்... தந்தை மரணம்... 8 பேர் கைது!

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டம், இந்தாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிஷுண்டா கிராமத்தில் உள்ள கரிஷுண்டா பஸ்சிம்பாறை தொடக்கப் பள்ளியில், ஆகஸ்ட் 13-ம் தேதி கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து ஆசிரியரிடம் ஹஃபீஸ் விசாரித்துள்ளார்.

மேலும், பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து பிரசாரம் மேற்கொள்ள அனுமதியும் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆசிரியர், மறுநாள் வருமாறு அவரிடம் தெரிவித்ததாக CJP தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், அதன்பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து உள்ளூர் பாஜகவினருக்கு தகவல் தெரிவித்ததாக CJP தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹஃபீஸ் கூறியதாகத் தெரிவிக்கப்படும் தகவலின்படி, சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணியளவில் இரும்புக் கம்பிகள், கட்டைகள் மற்றும் கடப்பாரைகளுடன் ஒரு கும்பல் அவரது வீட்டைச் சூழ்ந்துள்ளது. பின்னர் ஹஃபீஸின் செல்போனை பறித்துக் கொண்டு, அதிலிருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் கும்பல் ஹஃபீஸை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிய நிலையில், தனது மகனைக் காப்பாற்ற அவரது தந்தை மாஃபிக் முயன்றுள்ளார். இதையடுத்து ஹஃபீஸ் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆத்திரமடைந்த கும்பல் மாஃபிக்கை சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாஃபிக், முதலில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பர்தமான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரை இழந்த ஹசீனா பேகம், ஆகஸ்ட் 16-ம் தேதி மதியம் இந்தாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் 5 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 15 பேர் கொண்ட கும்பலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனடி நடவடிக்கையாக, பாஜக பூத் லெவல் தலைவர் அஷ்டம் மாஜி உள்ளிட்ட 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கு குறித்து பேசிய பாங்குரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணு ராய், “புகார் கிடைத்த சில மணி நேரங்களிலேயே 8 பேரை கைது செய்துவிட்டோம். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

“பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” – சுவேந்து அதிகாரி

இந்தக் கொலை சம்பவத்தில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

“இங்கு பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் அனைவரும் குற்றவாளிகள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

“அப்துல் மற்றும் அவரது குடும்பத்துடன் உறுதியாக நிற்கிறோம்” – CJP

இந்தச் சம்பவம் குறித்து CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், “CJP, அப்துல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. அவரது தந்தையின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், திப்கே தனது எக்ஸ் பதிவில், “வன்முறையின் மூலம் எங்களை அமைதியாக்க முடியும் என்று நினைக்கும் வெறுப்புப் பிரச்சாரகர்களுக்கு ஒன்றைச் சொல்கிறோம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்கள் உறுப்பினர்களைத் தாக்குங்கள், எங்களை அச்சுறுத்துங்கள், எங்களை மிரட்ட முயற்சி செய்யுங்கள்... நாங்கள் இன்னும் கடுமையாகப் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹஃபீஸின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க, CJP-யின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படும் CJP செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் தற்போது அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

CJP: பள்ளி வசதிகளை ஆய்வு செய்த செயற்பாட்டாளர்... தந்தை கொலை - பாஜகவின் சதியா?
முதல்வரை அவதூறாக பேசிய நயினார் நாகேந்திரன்: "பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" - வன்னி அரசு கண்டனம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com