“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” வைரல்! நீதிபதி கருத்தால் உருவான விர்சுவல் பார்ட்டி.. இளைஞர்களின் இணையப் புரட்சியா?

இந்த இயக்கம் உருவாக காரணமானது, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்
CJP
Surya kant
Published on
Updated on
2 min read

இந்திய அரசியலில் புதிய டிஜிட்டல் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ள “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janata Party - CJP) சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் நையாண்டி மற்றும் அரசியல் விமர்சனத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விர்சுவல் அரசியல் கட்சி, சில நாட்களிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை பதிவு செய்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக ஊடக நிர்வாகியான அபிஜீத் திப்கே உருவாக்கிய இந்த CJP, இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் மத்தியில் வேகமாக ஆதரவைப் பெற்று வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு பிரச்சினை, சமூக அநீதி மற்றும் அரசியல் விரக்தி போன்ற விவகாரங்களை நகைச்சுவை மற்றும் கிண்டல் வழியாக பேசுவதால், இளைஞர்களிடையே இந்த இயக்கம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த இயக்கம் உருவாக காரணமானது, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தான் மே 15ஆம் தேதி உச்சநீதிமன்ற விசாரணையின்போது, இந்திய இளைஞர்களை “கரப்பான் பூச்சிகளைப் போல” என ஒப்பிட்டு அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவியது. போலிப் பட்டதாரிகள் மற்றும் சமூக ஊடக தாக்குதலாளர்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தாலும், அது வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை அவமதிப்பதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சமூக ஊடகங்களில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் நையாண்டி அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டது. “வேலையில்லாதவர், எப்போதும் இணையத்தில் இருப்பவர், தொழில்முறை குறை கூறுபவர்” போன்ற நகைச்சுவையான உறுப்பினர் தகுதிகளுடன் இந்தக் கட்சி தன்னை அறிமுகப்படுத்தியது. இந்தக் கட்சியின் இணையப் பிரபலம் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் ஆகியோர் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தனர். “1983 உலகக் கோப்பையை வென்றதே போதுமான தகுதி” என CJP தரப்பில் பதில் அளிக்கப்பட்ட பதிவு வைரலானது.

மேலும், இந்த விர்சுவல் பார்ட்டி தனது “தேர்தல் அறிக்கையையும்” வெளியிட்டுள்ளது. அதில் தலைமை நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பிந்தைய ராஜ்யசபா பதவிகளை தடை செய்ய வேண்டும், பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கட்சி தாவும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தல் தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மாணவர் பிரச்சினைகள், CBSE மறுமதிப்பீட்டு கட்டணங்கள் மற்றும் NEET தேர்வு சர்ச்சைகள் குறித்தும் இந்த விர்சுவல் பார்ட்டி கருத்து வெளியிட்டுள்ளது.

இணையத்தில் உருவான இந்த நையாண்டி இயக்கம் உண்மையான அரசியல் சக்தியாக மாறுமா என்பது தெளிவாக இல்லையென்றலும் , இந்திய இளைஞர்களின் அரசியல் விரக்தி, வேலைவாய்ப்பு ஏமாற்றம் மற்றும் சமூக ஊடக எதிர்ப்புக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் புதிய டிஜிட்டல் அரசியல் வடிவமாக CJP பார்க்கப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிரமில் இந்த விர்சுவல் பார்ட்டியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 9.2 மில்லியனை எட்டியுள்ளது.மேலும் X தளத்தில் 166,900க்கு மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com