

தமிழகத்தில் வாழ்வாதாரத்திற்காக வந்திருக்கும் வடமாநில தொழிலாளி ஒருவரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார். சமீபகாலமாக இத்தகைய "டிஜெனரேட்" கலாச்சாரம் பெருகி வருவதாகவும், இது சமுதாயத்திற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சிறு விஷயங்களுக்குக் கூட வெட்டு, குத்து போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதும், அதனைப் பெருமையாக எண்ணி பாடல்கள் மற்றும் ரீல்ஸ்கள் மூலம் "ரொமான்டிசைஸ்" செய்வதும் தவறான பாதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்கும் சம்பவங்கள் கூட ஆங்காங்கே நடப்பதைக் காண முடிகிறது. இத்தகைய வன்முறைப் போக்கைக் கொண்டவர்கள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேற்று நாட்டவர் போலவும், உளவாளிகள் போலவும் கருதி தாக்குவது சகிப்புத்தன்மையற்ற சமுதாயத்தையே காட்டுகிறது. உலகம் முழுவதும் பெருகி வரும் வெறுப்பு அரசியலே இத்தகைய வெறுப்பு உணர்வு வளரக் காரணம் என்று கூறிய அவர், சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படுவது இத்தகைய வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தின் கடன் சுமை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரே ஒரு புள்ளியியல் விவரத்தை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்றார். தமிழகத்தின் பொருளாதார அளவு, சமூகக் குறியீடுகள், கல்வி வளர்ச்சி, மருத்துவர்களின் எண்ணிக்கை போன்ற பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். வட இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வருவதே, இங்கு வாழ்வாதாரமும் பொருளாதாரமும் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது என்று அவர் விளக்கமளித்தார்.
மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் கிராமப்புற பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். அதேபோல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், சினிமாவில் பிரபலமானவர்கள் வரும்போது மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான் என்றும், ஆனால் அந்தக் கூட்டம் வாக்குகளாகவும், சட்டமன்ற இடங்களாகவும் மாறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பரவி வரும் சமூக வலைதளப் பதிவுகள் குறித்துப் பேசிய அவர், யாரோ ஒரு தனிநபர் போடும் பதிவுகள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்தியா கூட்டணியில், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உறுதியாகத் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.