திரும்பப் பெறப்பட்ட மசோதா! 'வெடிவெடித்துக் கொண்டாடிய திமுக' "பெண்களுக்கோ, நாட்டின் நலனுக்கோ உகந்தது இல்லை" - அமித் ஷா காட்டம்

"தமிழகத்திற்கு எதிரான மசோதா" நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றும், இந்த வெற்றி மாநில சட்டமன்றத் தேர்தலின் ஒரு முன்னோட்டம் மட்டுமே..
திரும்பப்பெறப்ப திருத்த மசோதா
திரும்பப்பெறப்ப திருத்த மசோதா
Published on
Updated on
2 min read

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, தொகுதி வரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான கட்டமைப்பைத் திருத்தியமைக்க கோரும் அரசியலமைப்பு மசோதா, 2026ஐ மக்களவை நிராகரித்தது. அவையில் வாக்களித்த 528 உறுப்பினர்களில், 298 பேர் மசோதாவை அங்கீகரித்த நிலையில், 230 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். இதனால், ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இந்த மசோதா பெறத் தவறியது.

அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 2026ம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய மசோதாவையும், யூனியன் பிரதேசச் சட்டங்கள் (திருத்த) மசோதாவையும் திரும்பப் பெற்றார். இந்த மசோதாக்கள், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் இடங்களை அதிகரிக்கவும், தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் முன்மொழிந்தன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்களை அதிகரிப்பது என்பது, தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகமாகக் குறைத்துவிடும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களை எதிர்த்தன. மேலும், 2026-27 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறையை அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று இந்த நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்கின. இந்த மசோதாவானது, மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை 543லிருந்து 850 ஆக உயர்த்துவதற்கும், இதில் அதிகபட்சமாக 815 உறுப்பினர்கள் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், 35 உறுப்பினர்கள் வரை யூனியன் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் முன்மொழிந்தது.

மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கில், மோடி அரசு வியாழக்கிழமை அன்று அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026, தொகுதி மறுவரையறை மசோதா, 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் அடங்கிய தொகுப்பைக் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு அலைகள் கிளம்பின. இதனையடுத்து, தமிழ்நாட்டில் திமுக சார்பில் கருப்பு சட்டை அணிந்தும், தொகுத்து மறுவரையறை பிரதியை எரித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டினார். இந்தியாவில் மிகவும் பிளவுபடுத்தும் கூட்டாட்சிப் பிரச்சினைகளில் தொகுதி வரையறையும் ஒன்றாகும். அண்மைக் ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியை குறைத்துள்ளதாலும், தங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற அதிக வளம் கொண்ட தென்னிந்திய மாநிலங்களில் இந்த மசோதாவிற்கான எதிர்ப்புக்கு குரலை பதிவு செய்தது. இதனையடுத்து தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர். பெண்களின் பிரதிநிதித்துவம் ஏன் ஒரு மிகப் பெரிய அரசியல் நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது? என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, “முதலாவது உண்மை என்னவென்றால், இது பெண்கள் மசோதா அல்ல. இதற்கும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சி” என்று கூறினார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான இந்த முக்கியமான வாய்ப்பை நாம் அனைவரும் தவறவிட வேண்டாம். நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்க வந்துள்ளேன். இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள், இது தேசிய நலன் சார்ந்தது.” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சியைப் பிரதிபலிக்க தொகுதி மறுவரையறை தேவை என்று கூறினார். "ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர்களின் உரிமைக்கு சமமான மதிப்பு இருக்க வேண்டும், இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, அது அவர்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார். இதனையடுத்து மசோதாவை நிறைவேற்ற போதுமான வாக்குசதவீதம் இல்லாததால் இந்த மசோதாக்கள் திரும்பபெறப்பட்டது. மக்களவையில், மசோதா நிறைவேறாதது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழகத்திற்கு எதிரான மசோதா" நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றும், இந்த வெற்றி மாநில சட்டமன்றத் தேர்தலின் ஒரு முன்னோட்டம் மட்டுமே என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வரவிருக்கும் 2026 தமிழகத் தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அவர் மேலும் அறிவித்தார். மேலும், இதனை கொண்டாடும் நோக்கில் வெடி வெடித்தும், மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுக-வினர் கொண்டாடினர். 'காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நிறைவேறாமல் தடுத்தன. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தோற்கடித்து, அதே சமயம் அதைக் கொண்டாடிப் பாராட்டுவது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதும் ஆகும். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதைச் செய்வது இது முதல் முறையல்ல, மாறாக மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. அவர்களின் சிந்தனை பெண்களின் நலனுக்கோ அல்லது நாட்டின் நலனுக்கோ உகந்ததாக இல்லை' என்று அமித் ஷா தனது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com