உ.பி.யில் அரசியல் காட்சி மாறுகிறதா..? பா.ஜ.க. தலைவருடன் முலாயம் சிங் யாதவ்... சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ...

எதிரெதிர் நிலையில் இருக்கும் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் அரசியல் காட்சி மாறுகிறதா..? பா.ஜ.க. தலைவருடன் முலாயம் சிங் யாதவ்... சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ...
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, காங்கிரஸ் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ஏஐஎம்ஐஎம் என ஏராளமான கட்சிகள் போட்டிக்கு தயாராகிவருகின்றன.

இந்நிலையில் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று உத்தரப் பிரதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சமாஜ்வாதி கட்சியை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக  தேர்தல் களத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளை பாஜகவின் பி டீம் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்த சூழலில் மோகன் பகவத் உடன் முலாயம் சிங் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுக்கிறது. அதுவும் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த புகைப்படம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் வழித் தோன்றிய பாஜக உடன் கூட்டணி அமைக்கப் போகிறதா சமாஜ்வாதி என்ற பரபரப்பை கிளப்பியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com