கரையை கடந்தது,.. 'பிபார்ஜாய்' புயல்...!

கரையை கடந்தது,.. 'பிபார்ஜாய்' புயல்...!
Published on
Updated on
2 min read

தென்கிழக்கு அரபிக்கடலில் வலுப்பெற்ற பிபார்ஜாய் புயல் நேற்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இந்த புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

முன்னதாக நேற்று நண்பகலில் இருந்தே குஜராத்தின் கரையோர பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் பேய்மழை கொட்டியது. மேலும் புயல் கரையை கடக்க தொடங்கியபோது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கட்ச், தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களும் சாய்ந்த நிலையில் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். 


இதனையடுத்து,  கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் கடல் நீர் கரையோர கிராமங்களுக்குள் புகுந்த நிலையில் மாநிலத்தில் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார், தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதைப்போல முப்படைகள் மற்றும் கடலோர காவல்படை என பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் முழுவீச்சில் களமிறக்கப்பட்டன. அவர்கள் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவை கடந்தும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 

முன்னதாக புயல் கடந்து செல்லும் பகுதிகளிலிருந்து 94 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில்  இந்த புயல் காரணமாக இதுவரை 22 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன என்றும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் கனமழை மற்றும் பலத்த காற்றுடன் குஜராத்தில் பல்வேறு இடங்களில் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com