

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹூண்டாய் i20 கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்தவர்களை மீட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 24 பேர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
சரியாக நேற்று மாலை 6.50 மணியளவில் மெட்ரோ நிலையத்தில் கார் வெடித்து விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசார், சிறப்பு புலனாய்வு போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற் கட்டமாக வெடித்து சிதறிய காரின் உரிமையாளரான குர்கானை சேர்ந்த சல்மான் என்பவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இந்த கார் தற்போது இரண்டு நபர்களிடம் கைமாறியதாக அறியப்பட்ட நிலையில் தற்போதைய கார் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னல் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். மேலும் வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வெடி விபத்திற்கான காரணங்களை பற்றி தொடர்ந்து போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிவிபத்து காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ஹூண்டாய் கார் வெடித்த நிலையில் அருகிலிருந்து மேலும் சில வாகனகள் வெடித்து சிதறியதால் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.