

நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாக நுழைவு பகுதியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் நேற்று பதற்றமாக மாறியது. நீட் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பு தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதோடு தடியடி நடத்தியதாகவும், பலரை காவலில் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போராட்டம் இரவிலும் நீடித்து விடிய விடிய தொடர்ந்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற வாயில் மூடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், தேசிய அளவிலான பல்வேறு ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவுகள் தொடர்புடையவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவு பகுதிக்கு முன்னேற முயன்றபோது, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஏற்பட்ட சூழல் வன்முறையாக மாறியதாகவும், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.இந்த போராட்டத்தில் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும், பலர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதையடுத்து மத்திய அரசின் இந்த சிவன்முறை செயலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் பதிவில், "இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் விரோதமான பிரதமர் நரேந்திர மோடிதான். கடந்த ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நியாயமான கேள்விகளை எழுப்பிய மாணவர்கள் மட்டுமே தடியடி மற்றும் காவல் நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். இந்த அரசு இளைஞர்களை கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது தாக்குதலும் நடத்துகிறது," என்று குற்றம்சாட்டினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் இந்தச் சம்பவத்தை கண்டித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில், "CJP ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வி முறையில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு வன்முறையைத் தேர்வு செய்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "தன் சொந்த மாணவர்களையே அஞ்சும் அரசாங்கம் எந்த வகையான ஜனநாயகத்தை நடத்துகிறது? உரையாடலுக்குப் பதிலாக தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு சொந்தமானது. கருத்து வேறுபாடு குற்றமல்ல. மாணவர்களின் தைரியத்திற்கும் மன உறுதிக்கும் நான் தலைவணங்குகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை, போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.