"மோடி தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்.." - குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் போராட்டக்கார்கள்! டெல்லியில் பதற்றம் அதிகரிக்கிறதா?

எங்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
Jantar Mantar protest
Jantar Mantar protest
Published on: 
Updated on: 
1 min read

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடபட்டதோடு, மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிரதிநிதிகள் அவரிடம் கேள்வி எழுப்பி, அவருடன் முரண்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, "ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்" எனக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ள இந்தப் போராட்டம் இன்று (அக் 10) நடைபெறவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டெல்லி ஜந்தார் மந்தரில் மாணவ அமைப்பினரும், போராட்டக்காரகளும் அங்கு வரத்தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்த போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தடையை மீறினால் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, 45 டெல்லி மெட்ரோ மூடப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையங்களுக்கு வரவிருந்த உள்ளூர் ரயில்களுடன், பிற மாநிலங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தனது X தளபக்கத்தில், "எங்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார். போராட்டக்காரர்கள் மீதான பெரும் அடக்குமுறையும், டெல்லி முடக்கமும் வலிமையின் அடையாளங்கள் அல்ல; மாறாக, தன் சொந்த மக்களைக் கண்டு அஞ்சும் ஒரு தலைவரின் அடையாளங்களே" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், போராட்டத்திற்கு முன்னதாக டெல்லி முழுவதும் கிட்டத்தட்ட 600 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ள சிஜேபி கட்சியினருக்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் போராட்டம் நடத்திய 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கவல்துறையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com