

நரேந்திர மோடியின் அரசாங்கம் 225 நாட்கள் சீர்திருத்தம் செய்து புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை முன்வைத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு இடையில் மசோதாவை கொழுத்தினார் ஸ்டாலின். ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா திமுகவின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காட்சிகள் இதனை எதிர்த்து வருகின்றன. திமுகவை காங்கிரஸ் "எட்டப்பன் 2.0" என விமர்சிக்கிறது.
ஏப்ரல் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்ட அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026-க்கும், அரசியலமைப்பு (132வது திருத்தம்) மசோதா, 2026-க்கும் இடையே சில அடிப்படை வேறுபாடுகள் என்ன என்பதை விரிவாகக் காணலாம்.
ஆர்டிகள் 54: குடியரசுத் தலைவர் தேர்தல்:
ஏப்ரல் மாத மசோதா அரசியலமைப்பின் ஏழு சரத்துகளைத் திருத்த முற்பட்டது. நவம்பர் மாத மசோதா எட்டு சரத்துகளைத் திருத்துகிறது.
இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே கூடுதல் சரத்து, "குடியரசுத் தலைவர் தேர்தல்" தொடர்பான சரத்து 54 ஆகும்.
இதில், நவம்பர் மாத மசோதா "மாநிலம்" என்பதன் வரையறையில் "ஜம்மு மற்றும் காஷ்மீரை" சேர்க்கிறது. அதாவது யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பங்கு கிடைக்கிறது.
தற்போதைய சரத்து 54-ல் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் மட்டுமே மாநிலம் என்ற வரையறைக்குள் வருகின்றன.
ஆர்டிகள் 55: ஜனாதிபதி தேர்தல் முறை:
இந்த பிரிவில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால் ஜனாதிபதியைத் தேர்ந்தேடுக்கும்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பர். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் 'வாக்கின்' மதிப்பு அந்த தொகுதியின் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும்.
ஏப்ரல் மாத மசோதாவின்படி, இந்த மதிப்பை கணக்கிட எந்த மக்கள் தொகை கணக்கீட்டைப் பயன்படுத்துவது என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்யும்.
ஆனால் நவம்பர் மசோதா, 2051ம் ஆண்டுவரை ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை மட்டுமே பின்பற்றும் வகையில் ஒரு வரையறை நிர்ணயம் செய்கிறது.
இந்த மாற்றம் நாடாளுமன்றத்தின் அதிராகத்துக்கு ஒரு அரசியலமைப்பின் வழி ஒரு தடையை ஏற்படுத்துகிறது.
ஆர்டிகள் 81: மக்களவையின் அமைப்பு:
மக்களவை அமைப்பு என்பது இரண்டு கூறுகளை அடிப்படையாக கொண்டது. முதலாவது ஒரு மாநிலத்துக்கு எத்தனை தொகுதிகள் என நிர்ணயம் செய்வது, இரண்டாவது அந்தந்த தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வது.
இந்த இரண்டுக்கும் மக்கள் தொகைதான் அடிப்படை.
இப்போது ஒரு மாநிலத்துக்கு எத்தனை தொகுதிகள் என்பது 1971 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளது.
தொகுதிகளின் எல்லை 2001 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத மசோதா, தொகுதியின் எல்லைகளை நிர்ணயிக்க எந்த மக்கள் தொகைப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கியது.
ஆனால் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மசோதா, கடைசியாக வெளியான முழுமையான மக்கள் தொகையின் புள்ளிவிவரங்களை பயன்படுத்த வேண்டும் என்கிறது.
அதாவது, 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு நடந்து, அதன் முடிவுகள் வெளியாகும் முன்னர் இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் அமையும். தாமதமாக அமல்படுத்தப்பட்டால் 2027 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அமையும்.
ஆர்டிகள் 82: ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைத்தல்:
இதுதான் இந்த மசோதாவின் மிக முக்கியமான அம்சமாகும்.
ஏப்ரல் மசோதா, தொகுதி மறுசீரமைப்பு எப்போது, எந்த Census அடிப்படையில் நடைபெற வேண்டும் என்பதை நாடாளுமன்றம் Simple Majority மூலம் சாதாரண சட்டம் இயற்றுவது போல முடிவு செய்யும் அதிகாரத்தை வழங்கியது.
இதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மூல காரணமாக இருந்தது.
நவம்பர் மசோதா, 2051 வரை நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் ஒப்பீட்டு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் ஏற்பாட்டை அரசியலமைப்பில் செய்கிறது. இதனால் மக்களவையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை செய்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்.
ஆர்டிகள் 170: மாநில சட்டமன்றங்களின் அமைப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தொகுதிகளின் எல்லைகள் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும் என்பதை Article 170 குறிப்பிடுகிறது. சட்டமன்ற தொகுதிகள் எத்தனை இருக்க வேண்டும் என்பது மக்கள் தொகை அடிப்படையில் அமைகிறது.
ஏப்ரல் மசோதாவில் சட்டமன்றத்தின் எல்லைகளை நிர்ணயிக்க எந்த மக்கள் தொகைக் கணக்கீட்டை பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயிக்கும் உரிமை நாடாளுமன்றத்திடம் இருந்தது.
நவம்பர் மசோதா மக்கள் தொகை காரணமாக சட்டமன்றத்தின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளில் ஏற்படும் மாற்றத்தை 2051 வரை தள்ளி வைக்கிறது. மேலும் ஒரு மாநிலத்துக்கான அதிகபட்ச சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 650 என்றும் வரையறை செய்திருக்கிறது.