

மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பாராமதி விமான விபத்து குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் பலியான இந்த கோர விபத்தில், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில நொடிகள் முன்பாக விமானிகள் அறையில் பதிவான கடைசி வார்த்தைகள் பொதுமக்களை உலுக்கியுள்ளன. புதன்கிழமை காலை நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில், விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிகள் தங்களின் கட்டுப்பாட்டை மீறி ஏதோ ஒன்று நடப்பதை உணர்ந்த வேளையில், மிகுந்த அதிர்ச்சியில் உதிர்த்த வார்த்தைகள் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கோர விபத்தில் 66 வயதான அஜித் பவார், அவருடைய தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோருடன், விமானத்தை இயக்கிய தலைமை விமானி சுமித் கபூர் மற்றும் துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டெல்லியைச் சேர்ந்த விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த லியர்ஜெட் 45 ரக விமானம், பாராமதியில் உள்ள மேசை நிலப்பரப்பு போன்ற விமான ஓடுதளத்தில் இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. காலை 8:45 மணியளவில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய இந்த விபத்து குறித்த விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
விபத்து குறித்த காலவரிசைப்படி பார்த்தால், காலை 8:18 மணிக்கு விமானம் பாராமதி விமான நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் 15,000 மணிநேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் கொண்ட சுமித் கபூர் மற்றும் 1,500 மணிநேர அனுபவம் கொண்ட சாம்பவி பதக் ஆகியோருக்கு வானிலை குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்போது நிலவிய காற்று மற்றும் பார்வைத்திறன் குறித்து விமானிகள் கேட்டறிந்தபோது, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பார்வைத்திறன் தெளிவாக இருப்பதாக தரைக்கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது. இது ஒரு விமானம் தரையிறங்குவதற்கு போதுமான மற்றும் நிலையான அளவீடாகவே கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விமானம் ஓடுதளத்தை நெருங்கியபோது, ஓடுதளம் தெளிவாகத் தெரியவில்லை என்று விமானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு, மீண்டும் ஒருமுறை சுற்றி வந்து தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. இரண்டாவது முயற்சியின் போது ஓடுதளம் தெரிவதாக விமானிகள் உறுதிப்படுத்திய நிலையில், காலை 8:43 மணிக்கு தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், வழக்கமாக விமானிகள் தரையிறங்குவதற்கான அனுமதியை உறுதிப்படுத்தி மீண்டும் பேச வேண்டும். ஆனால், இந்த முறை விமானிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதுவே விபத்துக்கான முதல் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த ஒரே நிமிடத்தில், அதாவது காலை 8:44 மணிக்கு, ஓடுதளத்தின் தொடக்கப் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தெரிவதை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விமானம் தரையை மோதுவதற்கு முன்பாக விமானிகள் அறையில் "oh s***" என்பது அவர்களது கடைசி வார்த்தையாக பதிவாகியுள்ளது. துல்லியமான தடய அறிவியல் சோதனைகளுக்குப் பிறகே இந்த விபத்தின் முழுமையான பின்னணி வெளிச்சத்திற்கு வரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.