” தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது ” - கர்நாடக விவசாயிகள் நூதனப் போராட்டம்

” தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது ” - கர்நாடக விவசாயிகள் நூதனப் போராட்டம்

Published on

தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட காவிரி கண்காணிப்பு குழு பரிந்துரை செய்த நகலை எரித்து மண்டியா விவசாயிகள் கண்ணில்  கருப்பு துணி கட்டி கர்நாடக அரசுக்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தினசரி ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கர்நாடகா அரசு தரப்பில் தமிழகத்திற்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட ஆட்சேபனை தெரிவிக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒழுங்காற்று குழு ஆணையை எதிர்த்தும் மண்டியா மாவட்ட விவசாயிகள் கேஆர்எஸ் அணை முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசை குற்றம் சாட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். காவிரி விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா,  நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மண்டியா பொறுப்பு அமைச்சர் செலுவராய சுவாமி உள்ளிட்டோர் மௌனம் காப்பதாக கூறி கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தின் போது தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தாங்கள் அணையில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்ததால் தற்போது அங்கு அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com