கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்தின் துவக்க நாளில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், படிபூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கோவில் நீண்ட நாட்களாக திறக்கப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் சபரிமலை சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சபரிமலையில் 10-ந்தேதி வரை 16 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கூறினார். மேலும், இந்த சீசனில் கடந்த 9-ந் தேதி அதிகபட்சமாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் தரிசனம் செய்துள்ளனர் என குறிப்பிட்ட அவர், கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கபட்ட 24 நாட்களில் நடை வருமானம் மற்றும் காணிக்கையாக 125 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் சுற்றுசூழலுக்கு ஏற்ற அரவணை டின்களை சொந்தமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் வருகிற 27-ந் தேதி வரை தேவைப்படும் அரவணை, அப்பம் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் போக்குவரத்து பாதிப்பு ...