வரலாற்றில் முதல் முறையாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத நிலை இந்தியாவில் உருவாகியுள்ளது. அதிலும் இந்த தேர்தலில் தெளிவாக இது தெரிந்துள்ளது. இந்த முறை நடைபெற்ற தேர்தலில் 1 இடத்தில் கூட இடதுசாரி கட்சி ஆட்சி அமைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
2026 முற்பகுதி வரை தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி, கேரளத்தில் பினராய விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி இவை மட்டுமே இந்தியாவில் ஆண்டுவந்த இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிவந்தனர். வலதுசாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இவர்கள் இருந்துவந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு அது முடிவிற்கு வந்துள்ளது. இதைப்பற்றி தெரிந்துகொள்ள நாம் காலச் சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழற்றிப் பார்ப்போம்.
சிபிஐ(எம்) தலைவர் ஜோதி பாசு, 20 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்தார். மேலும், 23 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்காளத்தை ஆண்டுள்ளார். நிலச் சீர்திருத்தம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இவர் பெயர் பெற்றவர். 2008ம் ஆண்டுகள் சமயத்தில் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களை இடதுசாரிகள் ஆண்டு வந்தனர். இதனிடையில் வலதுசாரிகள் போக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இடதுசாரிகளின் வளர்ச்சி குறைய ஆரம்பித்தது. 1951-52ல் நாட்டில் முதல் தேர்தல் நடைபெற்றபோது, மக்களவையில் எதிர்க்கட்சிகளிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே அதிக இடங்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1957-ல், இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் கேரளத் தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் வெற்றி முத்திரையை பதித்தனர். அவர்களைத் தொடர்ந்து பின்னர் 1977-ல், மேற்கு வங்கத்தில் சிபிஐ(எம்) கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பின்பு, இந்தியபொதுவுடமை அரசியல்வாதி புத்ததேவ் பட்டாசார்யா, நவம்பர் 6, 2000 முதல் மே 18, 2011 வரை மேற்கு வங்காள முதலமைச்சராக இருந்தார். கேரளத்திலும் கூட இடதுசாரிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளனர். திரிபுராவில் கூட தசரத் தேப் ஏப்ரல் 10, 1993 முதல் மார்ச் 11, 1998 வரை முதல்வராகப் பதவி வகித்தார். இவருக்கு பிறகு, இந்திய மார்க்சிய அரசியல்வாதியான மாணிக் சர்க்கார் திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சரும் ஆனார்.
2010-க்கு பிறகு இடதுசாரி கட்சிகளுக்கு சரிவு தென்பட தொடங்கியது. 2014-ல் மத்தியில் பாஜகவின் அலை அடிக்கத்தொடங்கியது. மேலும், 2018ம் ஆண்டு இடதுசாரிகளின் திரிபுரா கோட்டையை கைப்பற்றியது பாஜக. 36 இடங்களை வென்றதன் மூலம், கம்யூனிஸ்டுகளின் இடங்களின் எண்ணிக்கை 50-லிருந்து வெறும் 16-ஆகக் குறைந்தது. இதன் பிறகு கேரளத்தில் மட்டுமே இடதுசாரிகளின் கைகள் ஓங்கியிருந்தது. தற்போது இந்த தேர்தலில் அதுவும் கைவிட்டு போனது. ஒருகாலத்தில் இந்திய அரசியலிலும் சரி, அரசின் முடிவுகளில் சரி முடிவெடுக்கும் நிலையில் இடதுசாரிகள் இருந்தனர். குறிப்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு காலத்தில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இது, இந்தியாவின் அணுசக்தி நிலையங்கள் மீது விரிவான சர்வதேசக் கண்காணிப்புக்கு ஈடாக, அணு எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதனை, அமெரிக்கா மீது சந்தேகம் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அப்போது, 62 இடங்களைக் கொண்டுள்ள இடதுசாரிகளின் ஆதரவு மன்மோகன் சிங்கின் ஆட்சியை தூணாய் தாங்கி நின்றது. ஒப்பந்தத்தை முன்னெடுத்து சென்றால், ஆதரவை திரும்ப பெற்றுக்கொள்வோம் என்று அன்றைய இடதுசாரி கட்சிகள் அச்சுறுத்தியது.
தற்போது கடைசியாக கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்த மாநிலமாக இந்தியாவில் கேரளம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசியல் கட்சிகளின் கூட்டணியான இடது முன்னணி, 1977 முதல் 2011 வரை அங்கு ஆட்சியில் இருந்தது. பின்னர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அதன் நீண்டகால ஆட்சியை தற்போது முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. திரிபுராவில், இடது முன்னணி 1993 முதல் 2018 வரை ஆட்சி செய்தது. அதன்பிறகு பாஜக அதனை கைப்பற்றியது. கேரளாவில், இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. சமீபத்திய தேர்தலுக்கு முன்பு, 2016 முதல் இடதுசாரிகளே ஆட்சியில் இருந்தனர் தற்போது அதுவும் முடிவிற்கு வந்துள்ளது. இறுதியாக தமிழகத்தில் ஸ்டாலின் கூட்டணியில் அமைந்த மதசார்பற்ற கூட்டணியும் இந்த 2026 சட்டமன்ற தேர்தலோடு முடிவிற்கு வந்துள்ளது.
இடதுசாரிகளின் செல்வாக்கு மக்களிடையே குறைந்ததற்கு காரணமாக அமைந்தது, அவர்களுடைய அரசியல் அடுத்த பரிணாமத்திற்கோ அல்லது இளைஞர்களை கவர்வதிலோ கோட்டை விட்டுவிட்டதோ? என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.