உருகும் 'எவரெஸ்ட் சிகரம்!' பல ஆண்டுகளுக்குப் பின் வெளியே வரும் மனித உடல்கள்! "உலகிற்கு ஆபத்தா?" நேரில் பார்த்த பெண் வெளியிட்ட பகீர் தகவல்!

2024-ஆம் ஆண்டில் ஒரே சீசனில் மூன்று முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று சாதனை படைத்த பூர்ணிமா, தற்பொழுது இந்த சிகரம் மிகவும் பலவீனமாக மாறி வருவதாகக் கூறியுள்ளார்.
Purnima Shrestha warning
Purnima Shrestha warningPurnima Shrestha warning
Published on
Updated on
2 min read

எவரெஸ்ட் சிகரத்தின் இந்த ஆண்டுக்கான வசந்த கால மலையேற்ற சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், உலகின் மிக உயரமான இந்த சிகரத்தின் எதிர்காலம் குறித்துப் புகழ்பெற்ற மலையேற்ற வீரரும், புகைப்படப் பத்திரிகையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டில் ஒரே சீசனில் மூன்று முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று சாதனை படைத்த பூர்ணிமா, தற்பொழுது இந்த சிகரம் மிகவும் பலவீனமாக மாறி வருவதாகக் கூறியுள்ளார். நடப்பு சீசனின் போது எவரெஸ்ட் மலையிலுள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகவும், இதன் காரணமாகப் பல ஆண்டுகளாகப் பனிக்குள் புதைந்து கிடந்த பழமையான மனித உடல்கள் வெளியே தெரிவதாகவும் அவர் விபரமாகப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக எவரெஸ்ட் மலையின் 'கும்பு பனிவீழ்ச்சி' (Khumbu Icefall) பகுதியில், மிகப்பெரிய பனிப்பாறைகள் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருந்ததால், இந்த ஆண்டுக்கான மலையேற்ற சீசன் தொடங்குவதே இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தாமதமானது என்று பூர்ணிமா சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ள அவர், கும்பு பனிவீழ்ச்சிப் பகுதியைத் தாண்டுவது என்பது எப்போதுமே சரிந்து விழும் பனிப்பாறைகள், நகரும் ஏணிகள் மற்றும் ஆழமான பனிப்பிளவுகளுக்கு இடையே பயணிப்பது தான் என்றாலும், இப்போது பனிப்பாறைகளுக்கு நடுவிலேயே புதிய நீர் ஓடைகள் உருவாகி ஓடுவது மற்றொரு பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

தான் முதன்முதலில் பார்த்த எவரெஸ்ட் சிகரம் போல இப்போது இது இல்லை என்றும், உலகின் மிக உயரமான சிகரம் உருகி அழிந்து வருவதை நேரில் பார்ப்பது போல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த 2026 எவரெஸ்ட் சீசனின் போது, கும்பு பனிவீழ்ச்சிப் பகுதிக்குக் கீழே நடந்து சென்றபோது தனக்கு ஒருவித அசௌகரியமான பயம் ஏற்பட்டதாகவும், இந்த மலை இனிமேல் எப்போதும் உறைந்து நிலையாக இருக்கும் ஒரு மலை போலத் தெரியவில்லை என்றும், இது கடுமையான காயமடைந்து மிகவும் பலவீனமாகக் காட்சியளிப்பதாகவும் பூர்ணிமா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சராசரி வெப்பநிலையை விட, இமயமலைப் பகுதி மிக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

எவரெஸ்ட் பேஸ் கேம்ப் 2 பகுதிக்குத் தான் இறங்கி வரும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள பூர்ணிமா ஷ்ரேஸ்தா, தான் எவரெஸ்ட்டில் நேரில் பார்த்த விஷயங்கள் இனிமேலும் தள்ளிப்போடக்கூடிய ஒரு சாதாரண விஷயம் அல்ல என்றும், ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்கனவே நம் கண்முன்னே வந்துவிட்டன என்றும் கூறியுள்ளார். மலையேறுபவர்களின் கால்களுக்குக் கீழே உள்ள பனியின் தன்மை மாறி வருவதாகவும், ஒரு காலத்தில் எப்போதும் உறைந்து போயிருந்த இடங்களில் எல்லாம் இப்போது தண்ணீர் ஓடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பனிப்பாறைகள் உருகிப் பழைய உடல்கள் வெளியே வருவதும், பனிச்சரிவுகள் ஏற்படுவதும் எவரெஸ்ட் மலை மனிதகுலத்திற்குத் தரும் எச்சரிக்கை மணி என்றும், இந்த எச்சரிக்கைகளைச் சரி செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மோசமாவதற்கு முன்பு உலக நாடுகள் இதைக் கேட்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி என்றும் அவர் கூறியுள்ளார்.

பூர்ணிமாவின் இந்த சமூக வலைதளப் பதிவு இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் வேளையில், பல இணையவாசிகளும் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். மனிதர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால், இயற்கை மனிதகுலத்திற்கு எவ்வித இரக்கமும் இல்லாத வகையில் மிகக் கொடூரமாகப் பதிலடி கொடுக்கும் என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனரோ, நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய பேரழிவு மிகவும் அருகில் வந்துவிட்டதற்கான அறிகுறி இது என்று பதிவிட்டுள்ளார். ஒரு காலத்தில் உலகின் மிகவும் சுத்தமான இடமாக இருந்த எவரெஸ்ட் சிகரம், இப்போது மட்கிப்போகும் மனித உடல்களுடனும், மனிதக் கழிவுகளுடனும் ஒரு குப்பை மேடாக மாறி வருவது வேதனையான விஷயம் என்று பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com