
ஹிமாச்சல பிரதேசம் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் கடை வைத்து நடத்தி வந்தவர் பிரவீன் மிட்டல் . அதில் நஷ்டம் அடைந்ததால் ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் என குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
தொழில் செய்ய வங்கியில் வாங்கிய கடனுக்கு வங்கி நிர்வாகம் வீடு, கார் என அனைத்தையும் பறிமுதல் செய்த நிலையில் குடும்ப செலவிற்கு பிரவீன் மிட்டல் ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் வெளியில் இருந்து வாங்கிய சில்லறை கடன் காரர்கள் கடனை திருப்பி கேட்டு பிரவீனிற்கு தொல்லை கொடுத்த நிலையில் பிரவீன் தனது உறவினர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
“ஒருவரும் உதவ முன்வரவில்லை” என சொல்லப்படுகிறது. காலம் கடந்ததால் கடன் கொடுத்தவர்கள் பிரவீனிடம் கடுமையாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இந்நிலையில் பிரவீன் தனது குடும்பத்துடன் ஹரியானா பஞ்சகுல என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு ஆன்மீக நிகழ்ச்சிக்கு சென்று வந்து கொண்டிருக்கும் போது காரை பஞ்சகுலாவில் உள்ள புனித் என்பவற்றின் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் குடும்பத்தாருக்கும் மாத்திரை கொடுத்துவிட்டு தானும் மாத்திரை போட்டுக் கொண்டுள்ளார். அச்சமயம் வேலையை முடித்து வீடு திரும்பிய புனித் தனது வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த பிரவீனின் காரை கவனித்துள்ளார். காருக்கு அருகில் வந்த புனித் காரின் கதவை தட்ட காரில் அரை மயக்கத்தில் இருந்த பிரவீன் வெளியில் வந்துள்ளார்.
“வீட்டின் முன்பு ஏன் காரை நிறுத்தி உள்ளீர்கள்?” என கேள்வி கேட்ட புனித்திடம் பிரவீன் குமார் “ நான் இங்கு ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்தேன், எனக்கு அதிக கடன் பிரச்சனை இருப்பதால் நானும் என் குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மாத்திரையை போட்டுக் கொண்டோம்” என கூறிவிட்டு அப்படியே தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
இதனை பார்த்த புனித் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்ட நிலையில், காரில் இருந்த பிரவீனின் அம்மா, அப்பா , மனைவி 11 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் 14 வயதான ஆண் குழந்தை என்று 6 பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் மயக்கத்தில் இருந்த பிரவீனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்