வயலில் கிடந்த பச்சிளம் குழந்தை யாருடையது? மீட்ட விவசாயத் தம்பதி சொன்ன நெகிழ்ச்சியான விஷயத்தால் நெகிழ்ச்சி!

கோதுமை சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தபோது, எங்கிருந்தோ குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டுள்ளது.
Newborn girl rescued in Uttar Pradesh
Newborn girl rescued in Uttar Pradesh
Published on: 
Updated on: 
2 min read

பெண் குழந்தை பிறந்தால் சுமையாகக் கருதும் மனப்பான்மை இன்னும் சில இடங்களில் தொடர்வது வேதனையை ஏற்படுத்துகிறது. பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று மண்ணுக்குள் பாதியளவு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயத் தம்பதிக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டதால், அவர்கள் விரைந்து சென்று குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். அதைவிட நெகிழ்ச்சியான விஷயம், ஏற்கெனவே ஆறு மகன்கள் உள்ள அந்தத் தம்பதி, மீட்கப்பட்ட குழந்தையைத் தங்கள் மகளாக வளர்க்க விருப்பம் தெரிவித்திருப்பதுதான்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள நக்லா பஞ்சாரா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜிதேந்திர சிங் என்ற 53 வயது விவசாயியும், அவரது மனைவி ரீனா தேவி என்ற 50 வயது பெண்ணும் சனிக்கிழமை காலை தங்களது வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர். கோதுமை சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தபோது, எங்கிருந்தோ குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டுள்ளது.

முதலில் அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் இருவரும் சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் அழுகுரல் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றபோது, அங்கு மண்ணுக்குள் பாதியளவு புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தையைச் சுற்றிலும் மண் படிந்திருந்தது. அதன் வாயிலும் மண் இருந்ததாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். உடனடியாகக் குழந்தையை மண்ணிலிருந்து வெளியே எடுத்த தம்பதி, அருகிலுள்ள வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மற்றவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

குழந்தைக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதை உணர்ந்த ஜிதேந்திர சிங், அப்பகுதி மக்களின் ஆலோசனையின்படி குழந்தையை அருகிலுள்ள அரசு சமூக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றார். இதற்கிடையே தகவல் அறிந்த போலீசாரும் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடல்நிலையைக் கண்காணிக்கத் தொடங்கினர். சிறிது நேரம் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) வைத்து மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அலிகஞ்ச் சமூக சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர் சர்வேஷ் கூறுகையில், குழந்தை அதைக் கண்டுபிடித்த நபரால் போலீசாருடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தை சில நேரம் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கு வந்த குழந்தைகள் உதவி மையப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

இதற்கிடையே, அந்தக் குழந்தையைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்க்க விரும்புவதாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்கெனவே ஆறு மகன்கள் உள்ளனர். ஆனால், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருக்க வேண்டும் என்பது இருவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. வயலில் மீட்கப்பட்ட குழந்தையைப் பார்த்ததும் இருவரும் மனம் நெகிழ்ந்துள்ளனர். அந்தக் குழந்தையைத் தங்களது சொந்த மகளாகவே வளர்க்க விரும்புவதாகவும், அதன் வளர்ப்பு மற்றும் எதிர்காலத்துக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

குழந்தையை மீட்ட தம்பதியின் விருப்பம் இருந்தாலும், உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையைத் தத்தெடுப்பதற்கு அரசு நிர்ணயித்துள்ள சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, குழந்தைகள் உதவி மையத்திடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, முதலில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் (Child Welfare Committee) முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும். அந்தக் குழுதான் குழந்தையின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பான முடிவுகளை எடுக்கும்.

எட்டா மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தின் பொறுப்பாளர் ஜோதி சர்மா கூறுகையில், குழந்தை திங்கள்கிழமை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதுவரை அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு சுமார் ஒரு நாள் வயது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, குழந்தையை மீட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகப் போலீஸ் அதிகாரி ரோஹித் ரதி தெரிவித்துள்ளார்.

பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை இத்தகைய ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில், ஆறு மகன்கள் இருந்தும் ஒரு பெண் குழந்தைக்காக ஏங்கிய தம்பதி, தனக்குத் தொடர்பில்லாத பச்சிளம் குழந்தையை உயிருடன் மீட்டு, அதைத் தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தக் குழந்தையின் எதிர்காலம் குறித்த அதிகாரிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.