அமெரிக்கா முதல் பாகிஸ்தான் வரை.. பாஜக மற்றும் விஜய் வெற்றியை அலசி ஆராய்ந்த உலக ஊடகங்கள்

முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளதை உலக ஊடகங்கள் வியப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன
vijay and modi victory
விஜய்-நரேந்திர மோடி
Published on
Updated on
2 min read

இந்தியாவில் நடந்து முடிந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்த்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளதை உலக ஊடகங்கள் வியப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன. நியூயார்க் முதல் லண்டன் வரையிலும், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் இந்த தேர்தல் முடிவுகள் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துள்ளன.

பிரிட்டனின் முன்னணி செய்தி நிறுவனமான பிபிசி, "இந்தியாவின் மிகக் கடினமான அரசியல் எல்லையை மோடியின் பாஜ வென்றுள்ளது" என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மோடியின் 12 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இது மிக முக்கியமான மைல்கல் என்றும், கிழக்கு இந்தியாவில் பாஜவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு இந்த வெற்றி ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அது வர்ணித்துள்ளது. அதேபோல் பிரிட்டனின் மற்றொரு முக்கிய நாளிதழான தி கார்டியன், எதிர்க்கட்சிகளின் வலுவான கோட்டையாக இருந்த மேற்கு வங்காளத்தில் பாஜ பெற்ற வெற்றி, இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, மேற்கு வங்காளத்தில் பாஜ பெற்ற வெற்றியை "வரலாற்றுச் சாதனை" என்று குறிப்பிட்டுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு அருகில் கூட வராத பாஜ, தற்போது ஒரு பெரிய மாநிலத்தைக் கைப்பற்றியிருப்பது உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதி என்று அந்த இதழ் எழுதியுள்ளது. மேலும் தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின் புதிய கட்சி, பாரம்பரியமான திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டி வெற்றி பெற்றிருப்பதை ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான மாற்றமாக அந்தப் பத்திரிகை பதிவு செய்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தனது செய்தியில், இந்த வெற்றி பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் மத்தியில் அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஊக்கமருந்து என்று கூறியுள்ளது. 2024 பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த மாநில வெற்றிகள் 2029 ஆம் ஆண்டு அவர் நான்காவது முறையாகப் போட்டியிட வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாக அந்த இதழ் கணித்துள்ளது. மேலும் கேரளாவில் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும் அந்த ஊடல் சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தானின் டான் மற்றும் வங்கதேசத்தின் டாக்கா ட்ரிபியூன் ஆகிய ஊடகங்கள், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில் மம்தாவின் 15 ஆண்டுகால ஆட்சியை மோடி வீழ்த்தியிருப்பது, அவருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய செல்வாக்கை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com