பெற்றோர்கள் தங்களது சொத்துகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. வயதான காலத்தில் மகனும் மருமகளும் தங்களைப் பாதுகாப்பார்கள், கடைசி காலம் வரை அன்புடன் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் பல பெற்றோர்கள் தங்களது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளைப் பிள்ளைகளின் பெயருக்கு மாற்றிக் கொடுக்கின்றனர். ஆனால், சொத்தைப் பெற்ற பிறகு அதே பெற்றோர்களைக் கவனிக்காமல் விட்டால் என்ன செய்வது? சொந்த வீட்டிலேயே வாழ முடியாத நிலைக்கு ஒரு முதியவர் தள்ளப்பட்டால் அவருக்கு சட்டம் என்ன பாதுகாப்பு வழங்குகிறது? இதற்கு முக்கியமான பதிலளிக்கும் வகையில் உயர்நீதிமன்றம் ஒன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
86 வயதான முதியவர் ஒருவர் தனது வீட்டை மூத்த மகனுக்குப் பரிசாக வழங்கியுள்ளார். ஆனால், அந்த வீட்டில் வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்ற உறுதியை மகனும் மருமகளும் மதிக்கவில்லை என்றும், முறையான பராமரிப்பு கிடைக்காமல் தான் முதியோர் இல்லத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, அவர் மகனுக்குக் கொடுத்த பரிசுப் பத்திரத்தையே ரத்து செய்து, வீட்டை மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மலாடு பகுதியில் நடைபெற்றுள்ளது.
தேவ்சந்த் கோர்ஷி தேதியா என்பவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் இணைந்து கடந்த 1999ஆம் ஆண்டு ஒரு குடியிருப்பை வாங்கியிருந்தார். அந்த வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 2015ஆம் ஆண்டு அவரது மனைவி உயிரிழந்த பிறகு, குடும்பச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டன. மூத்த மகனான ஷிபன் தேதியாவும் அவரது மனைவியும், தந்தை தங்களுடன் தொடர்ந்து வசிப்பார் என்றும் அவருடைய தேவைகளைப் பார்த்துக்கொள்வோம் என்றும் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை நம்பிய தந்தை, 2018ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி அந்த வீட்டை மகனின் பெயருக்கு பரிசுப் பத்திரம் மூலம் மாற்றிக் கொடுத்தார். ஆனால், அந்தப் பத்திரத்தில் மிக முக்கியமான நிபந்தனை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதாவது, தந்தை தனது வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டில் வசிக்க உரிமை உண்டு என்றும், மகனுக்கு வழங்கப்படுவது பெயரளவிலான உரிமை மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சொத்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறியதாகத் தந்தை குற்றம்சாட்டினார். கொரோனா காலத்தில் வீட்டிற்குள் நுழையவும், தன்னுடைய தனிப்பட்ட பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார். பின்னர் அவர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, தங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லாத அறைகளிலும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இறுதியில் கோரே பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு வழக்கறிஞர் மூலம் மகனுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பி, தன்னைப் பராமரிக்க வேண்டும் என்றும் பரிசுப் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினார். 2023ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாயத்தை அணுகினார். அங்கு மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை வழங்கவும், அவருடைய கிடங்கின் உரிமையை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், வீட்டுக்கான பரிசுப் பத்திரத்தை ரத்து செய்ய மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
மகனும் மருமகளும் தங்கள் தரப்பில் வேறுபட்ட வாதங்களை முன்வைத்தனர். அந்த வீட்டை வாங்குவதற்கு மகன் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.13.50 லட்சம் செலவிட்டதாகவும், தந்தையை மீண்டும் வீட்டில் தங்க அனுமதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், வீட்டின் உரிமை தொடர்பான பணம் செலுத்திய விவரங்களைத் தாண்டி, பரிசுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாழ்நாள் வசிப்புரிமை நிபந்தனையே இந்த வழக்கின் முக்கிய அம்சம் என்று நீதிமன்றம் கருதியது.
நவம்பர் 26ஆம் தேதி நீதிபதி ஆர்த்தி சாத்தே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007-ன் 23வது பிரிவை நீதிமன்றம் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இந்தச் சட்டத்தின்படி, ஒரு மூத்த குடிமகன் தனது சொத்தைப் பராமரிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு, அந்த நிபந்தனை நிறைவேற்றப்படாவிட்டால், உரிய சூழலில் அந்தச் சொத்து மாற்றத்தை ரத்து செய்ய முடியும்.
தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் வீட்டில் வசிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பதால், அவரை அங்கு நிம்மதியாக வாழ அனுமதிப்பதும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் பரிசைப் பெற்றவர்களின் பொறுப்பு என்று நீதிமன்றம் விளக்கியது. பராமரிப்பு என்பது பணம் கொடுப்பதுடன் முடிந்துவிடுவதில்லை; ஒருவர் அமைதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையும் அதில் அடங்கும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
இதன் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு எழுதப்பட்ட பரிசுப் பத்திரத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மகனும் மருமகளும் 15 நாட்களுக்குள் வீட்டைத் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் காவல்துறை உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்படலாம் என்றும் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
வயதான பெற்றோர்கள் தங்களது சொத்துகளைப் பிள்ளைகளுக்கு மாற்றிக் கொடுக்கும்போது, வாழ்நாள் முழுவதும் வசிக்கும் உரிமை மற்றும் பராமரிப்பு தொடர்பான நிபந்தனைகளைப் பத்திரத்தில் தெளிவாக இடம்பெறச் செய்வது அவசியம். சொத்தைப் பிள்ளைகளுக்கு வழங்குவது அன்பின் முடிவாக இருக்கலாம், ஆனால் அந்த அன்பைப் பயன்படுத்தி பெற்றோரின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்பதையே இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.