காதலனுடன் ஏற்பட்ட பிரச்சினையைப் பேசித் தீர்க்காமல், அவரைக் கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாக 19 வயது இளம்பெண் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காகத் தனது நண்பர்கள் நான்கு பேரின் உதவியையும் அவர் நாடியதாகக் கூறப்படுகிறது. காதலனைச் சந்திக்க வந்த இளைஞரைத் திட்டமிட்டுக் கடத்தி, காருக்குள் வைத்து கொடூரமாகத் தாக்கி, அவரது செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். பின்னர் ஆற்றங்கரையோரத்தில் காயங்களுடன் அவரை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர் காவல்துறையைத் தொடர்புகொண்டதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் 19 வயதான சஃபானா என்ற இளம்பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சஃபானாவின் நண்பர்களான 20 வயது நதியா, 25 வயது ரபீபா மற்றும் 28 வயது இர்ஷாத், 25 வயது அசருதீன் ஆகியோர் மற்ற குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, சஃபானாவும் அவரது காதலனும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காதலன் தன்னைக் கட்டுப்படுத்துவதாகவும், தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் சஃபானா கருதியதாக விசாரணை தொடர்பான செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அவரிடமிருந்து விலகுவதற்குப் பதிலாக, அவரைத் தாக்கி கொலை செய்யும் திட்டத்தைத் தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி நள்ளிரவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தனது காதலியைச் சந்திப்பதற்காக அந்த இளைஞர் தனது நண்பர் ஒருவருடன் திரூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சஃபானாவைத் தொடர்புகொண்டு பேச முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரைச் சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி நதியா அந்த இளைஞரை அணுகியுள்ளார். அவருடன் இரண்டு ஆண் நண்பர்களும் இருந்துள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய இளைஞர், அவர்களுடன் சென்றுள்ளார். பின்னர் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்த காருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரையும் அவருடன் வந்த நண்பரையும் காருக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றியதாகக் கூறப்படுகிறது. காருக்குள் வைத்து காதலனை கடுமையாகத் தாக்கியதுடன், அவரது செல்போனையும் பறித்துள்ளனர். அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் தாழேபாலம் ஆற்றங்கரை அருகே காயமடைந்த இளைஞரைச் சாலையோரத்தில் விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பலத்த காயமடைந்த நிலையிலும் அந்த இளைஞர் உயிர் பிழைத்துள்ளார். அவருடன் வந்த நண்பர் காவல்துறையைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விரைந்து விசாரணையைத் தொடங்கினர். திரூர் காவல் ஆய்வாளர் ஜலீல் கருதேடத் தலைமையிலான போலீஸ் குழுவினர், புதன்கிழமை அதிகாலையில் தாழேபாலம் பகுதியில் ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இந்தத் தாக்குதலில் ஒவ்வொருவருக்கும் இருந்த தொடர்பு குறித்து போலீசார் விசாரித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண் குற்றவாளிகளான இர்ஷாத் மற்றும் அசருதீன் மீது ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் ஏற்கெனவே சிறைத் தண்டனையையும் அனுபவித்துள்ளனர். கேரள சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (KAAPA) கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான முழுப் பின்னணி, திட்டமிடலில் ஒவ்வொருவரின் பங்கு மற்றும் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனைச் சந்திக்க வந்த இளைஞருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.