பயணிகளுக்கு அடித்த பம்பர் லாட்டரி! கன்பார்ம் சீட் தராத ரயில்வேக்கு விழுந்தது செம அடி! டிக்கெட் விலையை விட 10 மடங்கு அபராதம்!

20,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு போஜ்பூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்
good news for train passengers
Published on
Updated on
2 min read

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கன்பார்ம் சீட் (உறுதி செய்யப்பட்ட இருக்கை) கிடைத்தும், பயணிகளுக்கு இருக்கை வழங்கத் தவறிய இந்திய ரயில்வே துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக அபராதம் விதித்துள்ளது. ரயிலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் கிடைக்காமல், ஒட்டுமொத்த பயணத்தையும் நின்றுகொண்டே முடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட 4 பயணிகளுக்கு தலா 20,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு போஜ்பூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த சேவை குறைபாட்டிற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தின் விந்தியாச்சலிலிருந்து பீகாரின் ஆரா பகுதிக்கு எல்டிடி பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ரயிலில் ஏறியபோது, தங்களுக்குக் கன்பார்ம் ஆகியிருந்த படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் ரயில்வே ஊழியர்கள் சிலர் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகளைத் தங்களிடமே ஒப்படைக்குமாறு அந்த ஊழியர்களிடம் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் இருக்கைகளை காலி செய்ய மறுத்து பயணிகளுக்கு அநியாயமாக இருக்கை உரிமையை மறுத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கிருஷ்ண பிரதாப் சிங் மற்றும் உறுப்பினர் கமல் கிஷோர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ரயில்வே துறையின் மோசமான சேவை குறைபாடு காரணமாகப் பயணிகள் கடுமையான "மன உளைச்சல், உடல் ரீதியான வேதனை மற்றும் பொருளாதார ரீதியான இன்னல்களுக்கு" ஆளாகியுள்ளனர் என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து, வட மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து, பயணிகளின் டிக்கெட் புக்கிங் தொகையான 1,876.80 ரூபாயை 8 சதவீத ஆண்டு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்றும், இத்துடன் 20,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை மற்றும் 15,000 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையை அடுத்த 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நீதிமன்றம் விதித்துள்ள இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த தொகையை ரயில்வே நிர்வாகம் செலுத்தத் தவறினால், பாதிக்கப்பட்ட பயணிகள் சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலம் 10 சதவீத ஆண்டு வட்டியுடன் இந்த முழு தொகையையும் மீட்டெடுக்கத் தகுதி உடையவர்கள் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் அளித்த புகாரின்படி, ரயிலில் இருக்கை கிடைக்காதது குறித்து அவர்கள் உடனடியாக ரயில்வே ஹெல்ப்லைன் எண் மற்றும் சமூக வலைதளங்களான 'ரயில் சேவா', 'ரயில் அமைச்சகம்' ஆகியவற்றின் மூலம் புகார்களைப் பதிவு செய்ய முயன்றுள்ளனர். புகாரைப் பதிவு செய்ததற்கான ரெஃபரன்ஸ் எண் எஸ்எம்எஸ் மூலமாக வந்த பிறகும் கூட, அவர்கள் பயணம் செய்த அந்த நேரத்தில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பக்ஸர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய டிடிஇ (TTE) என்ற ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றபோது, அவர் பயணிகளுக்கு உதவ மறுத்து, ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் எப்படியாவது "மேனேஜ்" செய்து கொள்ளுமாறு அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

ஆனால், இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தபோது ரயில்வே நிர்வாகம் விசித்திரமான வாதம் ஒன்றை முன்வைத்தது. ரயிலில் நடக்கும் இதுபோன்ற சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் அரசு ரயில்வே போலீசாரின் (GRP) கட்டுப்பாட்டிற்குள் தான் வருமே தவிர, ரயில்வே நிர்வாகத்தின் கீழ் வராது என்று கூறி தங்களது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயன்றது. மேலும், தங்களது சேவையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்றும், பயணிகளின் புகாரின் மீது ஏற்கனவே தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாகவும் ரயில்வே தரப்பில் வாதிடப்பட்டது.

இருப்பினும், பயணிகள் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ரயில் டிக்கெட்டுகள், ஆன்லைன் புகார் பதிவுகள், மொபைல் குறுஞ்செய்திகள் மற்றும் ரயிலில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் ஆகியவற்றை நீதிபதிகள் விரிவாக ஆய்வு செய்தனர். அதன் முடிவில், பயணிகளுக்குக் கன்பார்ம் சீட் மறுக்கப்பட்டது உண்மைதான் என்றும், வாக்குறுதி அளித்த சேவையை வழங்கத் தவறிய ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் கூறி ரயில்வேக்கு இந்த அதிரடி தண்டனையை நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com