நீதிமன்ற உத்தரவை மீறிய அரசு அதிகாரி! சொந்த சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த உயர் நீதிமன்றம் அதிரடி!

அந்த உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் பழைய காரணங்களைக் கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகப் பெண் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது
gujarat
Published on: 
Updated on: 
2 min read

அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படை. ஆனால், நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்த காரணங்களையே மீண்டும் முன்வைத்து ஒரு பெண்ணின் மனுவை அரசு அதிகாரி நிராகரித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சொந்த சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை வழக்கு செலவாகச் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவது நீதித்துறையின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் குறைக்கும் செயல் என்றும் நீதிபதி கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள அகமதாபாத் மாவட்ட ஆட்சியர், பூமிகா ராவ் என்ற பெண்ணின் விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை இரண்டு முறை நிராகரித்துள்ளார். ஏற்கெனவே இதே விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் முடிவை ரத்து செய்திருந்த உயர் நீதிமன்றம், புதிய விண்ணப்பத்தைச் சட்ட விதிகளின்படி பரிசீலித்து உரிய காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் பழைய காரணங்களைக் கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகப் பெண் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தப் பிரச்சினையின் பின்னணி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது. பூமிகா ராவ், தனது விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி, குஜராத் நில வருவாய்ச் சட்டத்தின் 65-வது பிரிவின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால், அந்த நிலம் இதற்கு முன்பு கைமாறிய விதம், நிலப் பரிவர்த்தனைகளுக்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டனவா, விண்ணப்பதாரர் விவசாயிதானா என்பன உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இதனை எதிர்த்து பூமிகா ராவ் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்தது. மேலும், புதிய விண்ணப்பத்தைப் பெற்று சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. குறிப்பாக, நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி வழங்குவது தொடர்பான விசாரணையில், விண்ணப்பதாரர் அந்த நிலத்தின் உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளரா, அந்த நிலம் விவசாய நிலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா போன்ற அம்சங்களையே அதிகாரி கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. ஏற்கெனவே நடைபெற்ற நிலப் பரிவர்த்தனைகளின் சட்டபூர்வமான தன்மையைத் தீர்மானிப்பது இந்த விசாரணையின் வரம்புக்குள் வராது என்றும் விளக்கியிருந்தது.

அந்தப் பெண் ஏப்ரல் 7ஆம் தேதி மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால், ஆகஸ்ட் 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அதையும் நிராகரித்தார். முன்பு கூறப்பட்ட நிலப் பரிவர்த்தனை தொடர்பான காரணங்களுடன், நிலச் சீர்திருத்தத் துறை அதிகாரிகளின் எதிர்மறையான கருத்துகளையும் அவர் தனது முடிவுக்குக் காரணமாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டாவது நிராகரிப்பை எதிர்த்து பூமிகா ராவ் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் சுனில் ஜோஷி, நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்த காரணங்களையே மாவட்ட ஆட்சியர் மீண்டும் பயன்படுத்தியுள்ளதாக வாதிட்டார். மேலும், மாநில அரசு மேல்முறையீடு தாக்கல் செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் திரிவேதி, மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில் அரசு இருந்தபோது மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவைப் பிறப்பித்ததாக விளக்கமளித்தார். ஆனால், அத்தகைய மேல்முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி எம்.கே. தாக்கர், அரசு அதிகாரிகளும் துறைகளும் நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்திற்குள் மதித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். உத்தரவைச் செயல்படுத்துவதில் சிக்கல் இருந்தால், அதை மீறிச் செயல்படுவதற்குப் பதிலாக நீதிமன்றத்தை அணுகி உரிய சட்ட நிவாரணம் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த நிராகரிப்பு உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பெண்ணின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்படி முடிவெடுக்கவும் உத்தரவிட்டது. இதனுடன், வழக்குச் செலவாக ரூ.1 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் தனது சொந்த சம்பளத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறினால், மாநில அரசு அந்தத் தொகையைச் செலுத்திவிட்டு பின்னர் அவரது சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை உரிய சரிபார்ப்புக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்படும். ஒரு சாதாரண நிலப் பயன்பாட்டு அனுமதி தொடர்பான பிரச்சினை, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் எவ்வாறு மதிக்க வேண்டும் என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. அரசு அதிகாரிகளின் முடிவுகள் சட்டத்திற்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் உட்பட்டவையே என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.