

சோனியா காந்தியின் வாழ்க்கையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் இழப்பு, காங்கிரஸ் கட்சியில் நடந்த முக்கிய மாற்றங்கள், வெற்றி - தோல்விகள் என இந்திய அரசியலின் முக்கிய அத்தியாயங்கள் நிறைந்திருப்பதால் Belonging: A Journey of Love என்ற அவரது நினைவுக்குறிப்பு புத்தகம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தாலியில் தொடங்கிய அவரது வாழ்க்கை எப்படி இந்தியாவின் மிகப் பெரிய கட்சியை நிர்வகிக்கும் இடத்துக்கும், இப்போது மக்களைப் பிரிக்கும் சித்தாந்தத்தை எதிர்த்து போராடும் நிலைக்கும் வந்தது என்பதை அவரது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
இந்திய அரசியல் சூழல் கடந்த 12 ஆண்டுகளில் எதிர்க்கட்சியினர் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ள முடியாத பகைமைக்கு வந்துள்ளது என்பதை அவரது குறிப்புகளில் எழுதியிருக்கிறார். குறிப்பாக பிரதமர் மோடி தன்னை நேருக்கு நேர் பார்ப்பது கூட இல்லை எனக் கூறியுள்ளார்.
ஒரு அத்தியாயத்தில் இந்த 12 ஆண்டுகளில், மோடிக்கும் தனக்கும் "நடைமுறையில் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை" என்று எழுதியிருக்கிறார்.
அவர் எழுதியிருப்பதாவது, "என் எதிரே அவர் வரும்போதெல்லாம், ஒரு சம்பிரதாயமான 'நமஸ்தே' சொல்லிக் கொள்வோம். ஆனால், கடந்த கால அரசியல் தலைவர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி ஒருவருக்கொருவர் காட்டிய அந்த அன்பும் கனிவும் இப்போது சுத்தமாக இல்லை. அவர் என் கண் பார்வையைக் கூடத் தவிர்த்துவிட்டு, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்துவிட்டு நகரவே முயல்கிறார்" எனக் கூறியுள்ளார்.
சில நேரங்களில் மோடி சோனியாவின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். "சில சமயங்களில் நான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பும்போது, 'டீக் ஹைன், ஆப்?' ('நல்லா இருக்கீங்களா?') எனக் கேட்பார். அதற்கு நானும் 'ஜீ, அப் மைன் டீக் ஹூன், சுக்ரியா' ('ஆமாம், இப்போது நான் நலமாக இருக்கிறேன், நன்றி') என்று பதிலளிப்பேன்..
... இப்படிப்பட்ட சுருக்கமான உரையாடல்களைத் தவிர, நாங்கள் இதுவரை உண்மையாக அமர்ந்து பேசியதே இல்லை. வழக்கமான பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதோடு சரி." என்று எழுதியுள்ளார்.
தனக்கும் மோடிக்கும் இருக்கும் வேறுபாடுகள் தனிப்பட்ட வெறுப்பு அல்ல என்றும் இந்தியாவைப் பற்றிய இரண்டு பிம்பங்களுக்கு இடையிலான பனிப்போர் என்றும் அவர் விவரித்துள்ளார்.
"இந்த தேசத்தைப் பற்றிய அவருடைய பார்வையும், என்னுடைய பார்வையும் முற்றிலும் வேறானவை.. நரேந்திர மோடியின் 'இந்தியா' பற்றிய பிம்பமானது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளாலும், அவரது சொந்த வாழ்க்கைப் பின்னணியினாலும் உருவாக்கப்பட்டது. அது அவருடைய நம்பிக்கையும் கலாச்சாரமும்தான் மற்ற எல்லாவற்றையும் விட மேலானது என்கிற ஒரு தீவிரவாதத் தன்மையை (Fundamentalism) உறுதிப்படுத்துகிறது. அந்த இந்தியாவில் அதிகார அமைப்பும், கட்டுப்பாடுமே மையமாக இருக்கின்றன.
அவர் தனது பார்வையிலான இந்தியாவுக்காகப் போராடினார், நானோ எனது பார்வையிலான இந்தியாவுக்காகப் போராடினேன். அது ஆதிக்கம் இல்லாத, அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற, சமூகநீதியைப் பேணும் ஒரு இந்தியா! இதில் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை" என்கிறார்.
மோடியின் அரசியல் பின்புலத்தைப் பற்றி சோனியா கூறுகையில், "ஒரு எளிய பின்னணியிலிருந்து வந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குள் உழைத்து, அதிகாரத்தின் உச்சிக்கு அவர் உயர்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், அவரது ஊடக (PR) குழுவினர் வெளியுலகிற்குக் காட்டுவது போல, அவரது பின்னணி அவ்வளவு எளிமையானதாக இல்லை" என்கிறார்.
மேலும் மோடி அவர் மீது வெளிப்படுத்தும் வெறுப்பு குறித்து, "பிரதமருக்கு என் மீது இருக்கும் இந்த வெறுப்பு, ஆர்.எஸ்.எஸ் தந்த மனப் பயிற்சியில் இருந்துதான் பிறக்கிறது என நினைக்கிறேன். ஒரு குறுகிய, கடுமையான இந்துத்துவ வடிவத்தை அரசியல் செயல்திட்டமாக மாற்றி, அதைத் தன் தொண்டர்களின் மனதில் அந்த அமைப்பு விதைத்துள்ளது." என ஆர்.எஸ்.எஸ் கூர்மையான விமர்சனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான தனது பார்வை குறித்து, ""ஆனால், இந்து மதத்தின் மிக முக்கிய கொள்கையான 'அனைவரையும் உள்ளடக்கும் பண்பு' என்பது, 'ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி' (உண்மை என்பது ஒன்றுதான், ஆனால் அதை அடையும் வழிகளோ பல) என்ற வேத மந்திரத்தில் அடங்கியுள்ளது. இதுவே எனது மாமியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட நம்பிக்கை" என எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் மொழியையும் சோனியா கடுமையாக விமர்சித்துள்ளார். "நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட, பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவது போன்ற கொச்சையான மொழியையே அவர் சில சமயங்களில் பயன்படுத்துகிறார். பெரும்பாலான நேரங்களில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறார்.
நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்தியாவை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற பாதையில் செலுத்தியதற்காகவே பாஜகவின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார். சங் பரிவாரத்தின் இணையதளங்கள் முழுக்க நேருவுக்கு எதிரான அவதூறுகளாலும் பொய்களாலும் நிரம்பியுள்ளன. அவர்களின் ஒரே இலக்கு காங்கிரஸ் இல்லாத இந்தியா, காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் இல்லாத இந்தியா என்பதுதான்" என தெளிவான அரசியல் பார்வையை முன்வைக்கிறார்.