" விடுமுறை நாட்கள் என்பது மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு பொருந்தாது.." - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

" விடுமுறை நாட்கள் என்பது மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு பொருந்தாது.." - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து, மாத்திரைகள் மற்றும் படுக்கை வசதி இல்லாதது, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் பழுது, ஆம்புலன்ஸ் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் தினந்தோறும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். 

அப்போது பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று தான் ஆய்வுக்கு வந்த போது பொது மருத்துவமனையில் இருந்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் பூட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், மருத்தவ துறையில் இருப்பவர்கள் இப்படி அலட்சியமாக இருக்க கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய அனைத்து சிகிச்சைகளும் அரசு மருத்துவமனையிலும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்த அவர், சிகிச்சை அளிப்பதில் காலதாமதம், பரிசோதனைகளில் காலதாமதம் போன்ற காரணங்களால் உயிரிழப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் மருத்துவ துறைக்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார். அரசு பொது மருத்துவமனை ஒரு பரிந்துரைக்கும் இடமாகவும், கைகாட்டி மரமாகவும் இருக்க கூடாது என தெரிவித்த தமிழிசை, ஒரு மருத்துவர் என்ற முறையில், தான் இதை சொல்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய சூழலில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் எதுவும் மறுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படவுள்ளதாகவும், மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com