

நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடும் நிலையில் ஒன்றிய பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்யப்பட உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்பது, மக்கள்தொகை மாற்றங்களின் அடிப்படையில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் மீண்டும் வரையறுத்து, மாநிலங்களுக்கு இடையே மக்களவைத் தொகுதிகளை மறுபங்கீடு செய்யும் ஒரு செயல்முறையாகும். அரசியலமைப்பின் 82-வது பிரிவின்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் 550 உறுப்பினர்கள் வரை இருக்க அனுமதித்தாலும், தற்போது மக்களவையில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசு தற்போது இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும் 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும். மக்கள் தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதை தவிர்ப்பதற்காக, பல தசாப்தங்களாக தொகுதி வரையறை முடக்கப்பட்டுள்ளது. தற்போதைய தொகுதிப் பங்கீடு இன்னும் 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இருப்பினும், முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், இந்த முடக்கத்தை நீக்கி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு புதிய தொகுதி வரையறையைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்கிறது.
இடம்பெயர்வு, நகரமயமாக்கல் மற்றும் சீரற்ற மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதால், இந்தியாவின் மக்கள்தொகை அமைப்பு கணிசமாக மாறியுள்ளது என்று ஒன்றிய அரசாங்கம் வாதிடுகிறது. 2023 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தொகுதி மறுவரையறைப் பணி முக்கியமானது எனவும் குறிப்பிடுகிறது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை முன்னெடுப்பு தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான ஒருதலைபட்சமானது என்று கூறி, அதனை கடுமையான எதிர்க்கும் ஒருவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுபங்கீடு, மக்கள் தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை குறைக்கும் என்றும், அதே நேரத்தில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் என்றும் ஸ்டாலின் வாதிடுகிறார்.
அதையடுத்து நாளை தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக மூத்தவள் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் உயரட்டும் கருப்புக்கொடி! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்கு தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கும். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.” என்றும் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
“தொகுதி மறுவரையறை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குலரை ஒடுக்க பார்ப்பதாகவும்” பாஜக வை நேரடியாக சாட்டியுள்ளார். மேலும் இந்த தொகுதி எண்ணிக்கையின் உயர்வு வடமாநிலங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆனால் தென் மாநிலங்களை பாதிக்கும்” எனவும் மேலும் “இது பாஜகவின் சதி, சதி எப்படி சட்டமாக மாறும்” எனவும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் ஸ்டாலின். இது இந்தியாவை மீண்டும் இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் என்றும் எச்சரித்தார்.
மேலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது” மேலும் தேர்தல் கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் நிறைவடைந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு அவசர அவசரமா செய்ய வேண்டிய தேவையே இல்லை. நிதானமா விவாதிச்சு செய்ய வேண்டிய வேலை” என்றும் பதிவு செய்தர். “எப்போதும் பிஜேபி இப்படி திட்டமிட்டு ஒவ்வொன்றையும் திருப்பும். திருப்பி CAA, NRC NIA எஸ்ஐஆர் சிறப்பு வாக்காளர் திருத்தம்னு... இந்த மாதிரி வேலைகளை கொண்டு வந்து மக்களை எப்பவுமே ஒரு பதட்டத்துல வச்சிக்கிறது அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு” என்று நேரடியாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.