

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதில் பீகார் தேர்தலுக்கு முன்னரே அங்கு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வேலைக்காக புலம் பெயர்தல், விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவற்றை முறைப்படுத்தவே சிறப்பு வாக்காளர் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள், மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாகவே இதை கருதுகின்றனர்.
ஆனால் இதில் உள்ள பெரிய குளறுபடி, இத்தனை அவசரம் அவசரமாக இந்த பணிகளை செய்வதுதான். அதிக மனித உழைப்பும் கால அவகாசமும் தேவைப்படும் ஒரு வேலையை குறுகிய காலத்துக்குள் முடிக்க சொல்லுவது, ‘தேர்தல் நிலைய அதிகாரிகளுக்கு (PLO) -க்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த SIR வேலைப்பளுவால், குஜராத்தில் ஒரு ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
SIR பணிச்சுமையால் குஜராத்தின் கிர் மாவட்டத்தில் பணிபுரியும் 40 வயதான ஆசிரியரும், பூத் லெவல் அலுவலருமான (BLO) அரவிந்த் முல்ஜி வதேர் தனது சொந்த ஊரான தேவ்லி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும் மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கோடினாரில் உள்ள சாரா கன்யா தொடக்கப்பள்ளியின் ஆசிரியரான அரவிந்த் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளார்.
தன் மனைவிக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், “என்னால் இனிமேலும் இந்த SIR பணிகளை தொடர முடியாது, நான் சில நாட்களாகவே மிகுந்த சோர்வாகவும், மன அழுத்தத்திலும் உள்ளேன். நம் மகனை நன்றாக கவனித்துக்கொள். வேறு வழியே இல்லாமல்தான் நான் இந்த இறுதி முடிவை எடுத்தேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரது தற்கொலை கடிதம் ஆசிரியர்கள் மற்றும் BLO குழுக்களிடையே பரவியதால், மாவட்டம் முழுக்க பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது, மேலும் ஏற்கனவே மன அழுத்தத்தில் உள்ள, ஆசிரியர்களுக்கு அரவிந்தின் மரணம் ஒரு எச்சரிக்கை மணி என சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.