பிராமணர் முதல் சூத்திரர் வரை... ஐஐடி போஸ்டரில் சர்ச்சை வாசகங்கள்; கொந்தளிப்பில் மாணவர்கள்!

சூத்திரர்களின் பங்கு "உயர்ந்த வகுப்பினருக்குச் சேவை செய்வது" என்று விவரிக்கப்பட்டிருந்த பாதாகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடதுசாரி மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
பிராமணர் முதல் சூத்திரர் வரை... ஐஐடி போஸ்டரில் சர்ச்சை வாசகங்கள்; கொந்தளிப்பில் மாணவர்கள்!
பிராமணர் முதல் சூத்திரர் வரை... ஐஐடி போஸ்டரில் சர்ச்சை வாசகங்கள்; கொந்தளிப்பில் மாணவர்கள்!
Published on
Updated on
3 min read

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT மண்டி) வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி (ஜன்மாஷ்டமி) விழாவின்போது, தலித் மக்களுக்கு எதிரான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனம் சொல்வது என்ன?

இந்தச் சம்பவம் குறித்து நிறுவனத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவியல் விசாரணை நடத்துவதற்காக இந்த விவகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுவதன்படி, மேற்கண்ட மத விழா ஐஐடியின் எந்தத் துறையாலும் நடத்தப்படவில்லை. மாறாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து இந்த விழாவை நடத்தியுள்ளனர். குறிப்பிட்ட பதாகையை வைத்திருந்த மாணவர் யார் என்பது காவல்துறை விசாரணையிலேயே தெரியவரும்.

உண்மையைக் கண்டறியும் குழு, "எங்கள் நிறுவனமும் எங்கள் இயக்குநர் லக்ஷ்மிதர் பெஹராவும் சாதியம், மொழியியல், பிராந்தியவாதம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டிற்கும் முற்றிலும் எதிரானவர்கள்" எனக் கூறியுள்ளது.

பதாகையில் இருந்தது என்ன?

ஐஐடியில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த "பகவத் கீதை - காலத்தால் அழியாத ஞானம்" என்ற சுவரொட்டியே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். அதில், சமூகம் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அதில், பிராமணர்களின் பங்கு "கடவுளின் செய்தியைப் பரப்புவது", க்ஷத்திரியர்களின் பங்கு "சமூகத்தையும் ஆன்மீகத்தையும் பாதுகாப்பது", வைசியர்களின் பங்கு "பொருளாதாரத்தை இயக்குவது, மற்றவர்களை ஆதரிப்பது", மற்றும் சூத்திரர்களின் பங்கு "உயர்ந்த வகுப்பினருக்குச் சேவை செய்வது" என்று விவரிக்கப்பட்டிருந்தது.

IIT Poster
IIT Poster

மனித சமூகத்தின் நான்கு பிரிவுகளும் இயற்கையின் மூன்று குணங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செயல்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாகக் கூறும் பகவத் கீதையின் ஒரு ஸ்லோகமும் அதில் இடம்பெற்றிருந்தது.

SFI கடும் எதிர்ப்பு

இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது இடதுசாரி மாணவர் இயக்கம்.

SFI ஹிமாச்சல் மாநில தலைவர் அனில் தாகூர், "ஐ.ஐ.டி போன்ற ஒரு கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற மத நடவடிக்கைகளை அமைப்பது அரசியலமைப்பின் 28-வது பிரிவை மீறுவதாகும்" எனக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தவர்கள் மற்றும் ஏற்பாடு செய்தவர்கள் மீது இமாச்சலப் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என SFI வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஐஐடி இயக்குனர் என்ன சொல்கிறார்?

ஐஐடி மண்டியின் இயக்குனர் லக்ஷ்மிதர் பெஹரா, தான் எப்போதும் சாதி பிரிவினைக்கு எதிராக இருந்ததாகக் கூறிகிறார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்துள்ள அவர், தான் வளாகத்தில் இல்லை என்றும், சனிக்கிழமை (செப்டம்பர் 5, 2026) தான் திரும்பி வந்து ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் இந்தச் சர்ச்சை பற்றித் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் இதில் எந்த தரப்புக்கும் ஆதரவாக இல்லை என்றும், பல வகுப்பினர் இணைந்து உருவாகியுள்ள விசாரணைக் குழுவே இறுதி முடிவை எடுக்கும் என்றும் பேசியுள்ளார்.

லக்ஷ்மிதர் பெஹரா
லக்ஷ்மிதர் பெஹரா

இஸ்கான் அமைப்புடன் தொடர்புடையவரான பெஹரா, "சாதி பாகுபாட்டிற்கு எதிராக உறுதியாகப் பேசும் ஒரே அமைப்பு இஸ்கான் மட்டுமே. இஸ்கானில் சூத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும் கூட பூசாரிகளாக உள்ளனர். குணத்திற்கும் கர்மாவிற்கும் ஏற்பவே தொழில்முறை கடமைகள் அமைகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் தான் பதவியேற்ற பிறகே ஐஐடி மண்டியில் OBC, SC மற்றும் ST பிரிவு பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பெஹரா?

ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைச் சிறப்புத் துறைகளாகக் கொண்ட மின் பொறியியல் பேராசிரியரான பெஹரா, கடந்த காலங்களிலும் தனது கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

2023-ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்கும் மேகவெடிப்புகளுக்கும் விலங்குகள் மீதான சித்திரவதையே காரணம் எனக் கூறி, இறைச்சி சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களை உறுதிமொழி எடுக்கச் சொன்னார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, இயக்குநராகப் பொறுப்பேற்ற சிறிது நேரத்திலேயே, புனித மந்திரங்களை உச்சரித்துத் தனது நண்பரின் குடும்பத்தை "துஷ்ட ஆவிகளிடம்" இருந்து விடுவித்ததாகக் கூறிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது.

கடந்த ஜூன் மாதம், 'இந்திய அறிவு முறை மற்றும் மனநல பயன்பாட்டு மையம்' ஐஐடியில் ஒரு மாநாட்டை நடத்தியது. பகவத் கீதை, ஆயுர்வேதம் மற்றும் மறுபிறவி உள்ளிட்ட தலைப்புகள் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. அந்த மாநாட்டின் முதன்மை அமைப்பாளர்களில் ஒருவரான பெஹரா, "மறுபிறவி மற்றும் மரணத்திற்குப் பிந்தைய தொடர்பு" குறித்த அமர்வின் இணை அமைப்பாளராகவும் இருந்தார். இதில் கலந்துகொள்ள பல துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இப்போது எழுந்திருக்கும் இந்தப் புதிய விவகாரத்தில், காவல்துறையும் ஹிமாச்சல் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிராமணர் முதல் சூத்திரர் வரை... ஐஐடி போஸ்டரில் சர்ச்சை வாசகங்கள்; கொந்தளிப்பில் மாணவர்கள்!
அமைச்சராகும் தஞ்சாவூர் MLA; வெளியேற்றப்படும் 3 புள்ளிகள்... TVK அரசில் மாற்றம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com