இந்தியாவின் முதல் ஊழல்: `1957 முந்த்ரா வழக்கு.. சொந்த கட்சியை எதிர்த்த ஃபெரோஸ் காந்தி' - நிர்மலா சீதாராமன் கிளறிய கதை!

போஸ் விசாரணை வாரியம், இதில் வலுவான முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கருதியது. ஆனால், இதன் மூலம் தனிப்பட்ட நபர்கள் யாரும் நேரடியாகப் பயனடைந்ததாகத் தெரியவில்லை என்பதால், விசாரணையின் திசையை மாற்றியது.
India's First Scam: The 1957 Mundhra Case & How Feroze Gandhi Stood Against His Own Party
இந்தியாவின் முதல் ஊழல்: `1957 முந்த்ரா வழக்கு.. சொந்த கட்சியை எதிர்த்த ஃபெரோஸ் காந்தி' - நிர்மலா சீதாராமன் கிளரிய கதை!
Published on: 
Updated on: 
3 min read

இந்தியாவின் முதல் நிதி மோசடி என அழைக்கப்படும் முந்த்ரா வழக்கு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் பெரும்பான்மைப் பங்குகளை விற்பனை செய்தது தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் மத்திய அரசை விமர்சித்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1957-ஆம் ஆண்டு முந்த்ரா வழக்கைக் கிளறினார்.

"காங்கிரஸ், வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் தனது தனிப்பட்ட அமைப்புகளாகப் பயன்படுத்தி, தங்கள் விருப்பப்படி கடன் வழங்குமாறு வங்கி ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்தது எப்படி என்பது நம் அனைவருக்கும் தெரியும்... 1957-ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர்களின் செல்வாக்கால் ஹரிதாஸ் முந்த்ரா எல்.ஐ.சி.யிடமிருந்து பணம் பெற்றார்" என்று அவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) அன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

முந்த்ரா வழக்கு

பல லட்சம் இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த எல்.ஐ.சி. நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த ஒரு தொழிலதிபரின் நிறுவனப் பங்குகளைச் சந்தை விலையைவிட அதிக விலைக்கு வாங்கப் பயன்படுத்தப்பட்டது.

நேருவின் மருமகனான ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியபோது, அதிகார வர்க்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இறுதியில், பொது விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில், அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகியதையடுத்து சர்ச்சை புதிய கட்டத்தை எட்டியது.

மக்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் பணத்துக்கு அரசு எந்த அளவுக்குப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு பாடமாக அமைந்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிதாஸ் முந்த்ரா, ஏராளமான நிறுவனங்களைக் கையகப்படுத்தியதன் மூலம் ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அவரது வணிகம் பெரும்பாலும் கடன்களைச் சார்ந்திருந்ததால், அது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியது.

1957-ஆம் ஆண்டளவில், அவருடைய வணிக நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தன. ஒரு தனியார் தொழிலதிபரைப் பாதுகாப்பதற்காக அரசாங்க இயந்திரம் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியைச் சர்ச்சைக்குரிய எல்.ஐ.சி. பரிவர்த்தனை எழுப்பியது.

முந்த்ராவுடன் தொடர்புடைய ஆறு நிறுவனங்களான பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன், ஜெசாப் அண்ட் கம்பெனி, ரிச்சர்ட்சன் அண்ட் க்ரடாஸ், ஸ்மித் ஸ்டானிஸ்ட்ரீட் அண்ட் கம்பெனி, ஆஸ்லர் எலக்ட்ரிக் லேம்ப் மேனுஃபேக்சரிங் கம்பெனி மற்றும் ஏஞ்சலோ பிரதர்ஸ் ஆகியவற்றின் ரூ.1,26,86,100 மதிப்பிலான பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கியது. தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் எல்.ஐ.சி. மேற்கொண்ட மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தப் பங்குகள் வாங்கப்பட்ட விதமும் சர்ச்சைக்குரியதாக அமைந்தது. சந்தை மதிப்பைவிட அதிக விலை கொடுத்து இந்தப் பங்குகள் வாங்கப்பட்டிருந்தன. எல்.ஐ.சி. நிறுவனம் முந்த்ராவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, விலைகளை நிர்ணயித்து, இந்த ஒப்பந்தத்தை அவசரமாக முடித்தது. எல்.ஐ.சி.யின் முதலீட்டுக் குழுவிடம் இது தொடர்பாகக் கலந்தாலோசிக்கப்படவில்லை. முந்த்ராவின் வணிக நடைமுறைகள் கேள்விக்குரியதாக இருந்தபோதிலும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அவரது நிறுவனங்களின் பங்குகள் வாங்கப்பட்டன.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் ஃபெரோஸ் காந்தி. 1957 டிசம்பர் 16-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆவேசமான உரை நிகழ்த்திய அவர், முந்த்ராவிடமிருந்து வாங்கப்பட்ட பங்குகள் போலியானவை என்றும், அவை முறையற்ற வகையில் வாங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

அவர் இந்த விவகாரத்தை எழுப்பியிருக்காவிட்டால், இந்த ஊழல் வரலாற்றிலிருந்தே மறைக்கப்பட்டிருக்கக்கூடும்.

ஒரு பொதுத்துறை நிறுவனம், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் ஏன் இத்தகைய அசாதாரணமான பரிவர்த்தனையை மேற்கொண்டது என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.

இதற்காக அமைக்கப்பட்ட சாக்லா ஆணையம், அந்த முதலீட்டில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், நிறுவப்பட்ட வணிக விதிகள் மீறப்பட்டதாகவும் கண்டறிந்தது.

பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மருமகனும், ரேபரேலியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபெரோஸ் காந்தி, தனது சொந்தக் கட்சியினருக்கு எதிராகவே இந்த விவகாரத்தில் குரல் கொடுத்தார்.

நீதிபதி சாக்லா தலைமையிலான ஆணையம், அப்போதைய எல்.ஐ.சி. தலைவர் கே.ஆர். காமத்தை, முந்த்ராவின் பங்குகளை வாங்குமாறு முதன்மை நிதிச் செயலாளர் எச்.எம். படேல் கட்டாயப்படுத்தியதாகக் கண்டறிந்தது.

அந்த அறிக்கையில், ஹரிதாஸ் முந்த்ரா ஒரு தொழிலதிபராக அல்லாமல், பல்வேறு நிறுவனங்களைக் கையகப்படுத்தும் சாகசக்காரராகச் சித்தரிக்கப்பட்டார். அவரது தொழில் நடைமுறைகள் பிரச்சினைக்குரியவை என்பதில் நீதிபதிக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. எனவே, இது நியாயமான முதலீடு என்ற எல்.ஐ.சி.யின் வாதத்தை அவர் ஏற்கவில்லை.

எச்.எம். படேல் தன்னிச்சையாக இதைச் செய்தாரா அல்லது நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவரை நிர்பந்தித்தாரா என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது.

சாக்லா ஆணையத்தின் விசாரணை முடிவில், கிருஷ்ணமாச்சாரி 1958 பிப்ரவரியில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது நேரு அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தச் சர்ச்சை மூத்த அதிகாரிகளையும் பாதித்தது. எச்.எம். படேல் மற்றும் எல்.ஐ.சி. தலைவர் கே.ஆர். காமத் ஆகியோர் தங்கள் பதவிகளை விட்டு விலகினர்.

ஆனால், விவியன் போஸ் தலைமையிலான விசாரணை வாரியத்தின் முன் நடைபெற்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

போஸ் விசாரணை வாரியம், இதில் வலுவான முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கருதியது. ஆனால், இதன் மூலம் தனிப்பட்ட நபர்கள் யாரும் நேரடியாகப் பயனடைந்ததாகத் தெரியவில்லை என்பதால், விசாரணையின் திசையை மாற்றியது.

இறுதியில், 1957-ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் முந்த்ரா, உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1 லட்சமும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ.1.5 லட்சமும் நன்கொடையாக வழங்கியிருந்தது விசாரணையில் வெளிப்பட்டது.

இந்த நன்கொடைகளுக்கு நன்றிக் கடனாகவே, எல்.ஐ.சி. முந்த்ராவின் நலனுக்குப் பலனளிக்கக்கூடிய பங்குகளை வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் இன்னமும் விடையளிக்கப்படாத கேள்விகள் இருக்கின்றன.

60 ஆண்டுகளைக் கடந்தும் இந்த வழக்கு பேசப்படுவதற்குக் காரணம், ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய ஒருவர் எவ்வளவு பெரிய அமைச்சராக இருந்தாலும், பிரதமருக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், தனது தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற ஜனநாயகப் பாடத்தை இது உணர்த்தியதுதான்.

மற்றொன்று, ஃபெரோஸ் காந்தி தனது சொந்தக் கட்சிக்கு எதிராகவே கேள்வி எழுப்பியது, நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுக்கும் அதன் அதிகாரத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

India's First Scam: The 1957 Mundhra Case & How Feroze Gandhi Stood Against His Own Party
``தனியாரிடம் 'டீல்' பேசுகிறாரா 'கலெக்சன்' குமார்?.. கண்ணுக்கு தெரியாத இடத்தில் கமிஷன்.." - முன்னாள் அமைச்சர் கிடுக்குப்பிடி கேள்வி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.