GDP 7.8% வளர்ச்சி... மோடி அரசு பொய் சொல்கிறதா? வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி!

அரசு வெளியிடும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
GDP 7.8% வளர்ச்சி... மோடி அரசு பொய் சொல்கிறதா? வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி!
GDP 7.8% வளர்ச்சி... மோடி அரசு பொய் சொல்கிறதா? வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி!AI Generated
Published on
Updated on
3 min read

நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 7.8% ஆக பதிவாகியுள்ளது.

கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி–மார்ச்) பதிவான 8.6% வளர்ச்சியைவிட இது குறைவாகும். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்த 7% வளர்ச்சியைவிட அதிகமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த வளர்ச்சியை மிகப்பெரிய சாதனையாகக் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றம், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகள் மற்றும் உலகளாவிய அரசியல் சூழலில் நிலவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்தியா இந்த அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த ஜிடிபி கணக்கு உண்மையாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறதா? என்ற கேள்வியை பொருளாதார வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.

புதிய ஜிடிபி கணக்கீட்டு முறையில் அடிப்படை ஆண்டு 2011-12-ல் இருந்து 2022-23 ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய தரவுகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தில் நிதிச் செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், ஜிடிபி தரவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.8% என்று கூறப்பட்டது. இந்த ஆண்டும் அதே வளர்ச்சி விகிதம் கூறப்படுகிறது. ஆனால், பின்னர் கடந்த ஆண்டின் தரவுகள் திருத்தப்பட்டு 6.9% ஆக மாற்றப்பட்டன. அந்தத் திருத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டின் வளர்ச்சி அதிகமாகத் தெரிகிறது...” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் சந்திர கார்க்
சுபாஷ் சந்திர கார்க்

“கடந்த நிதியாண்டின் இதே முதல் காலாண்டில் ஜிடிபி 86 டிரில்லியன் ரூபாய் என்று கூறப்பட்டது. இப்போது அந்தத் தரவு 80 டிரில்லியன் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டின் 88 டிரில்லியன் ரூபாயை 2.6% வளர்ச்சியாகக் காட்ட முடிகிறது” என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த நிதியாண்டின் ‘ஜிடிபி அடிப்படை மதிப்பு’ பெரிதும் குறைக்கப்பட்டதன் மூலம், இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாகக் காட்டப்படுகிறது என்பதே அவரது குற்றச்சாட்டு.

ஜிடிபி வளர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாகவும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் பிரதமரும் கூறி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் இதனால் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்றும், சில நேரங்களில் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனால், அரசு வெளியிடும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

மெட்ராஸ் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் முனைவர் கே.ஜோதி சிவஞானம்
மெட்ராஸ் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் முனைவர் கே.ஜோதி சிவஞானம்

இந்தக் குழப்பத்துக்கு நடுவே, உண்மையான நிலையை அறிந்துகொள்ள மெட்ராஸ் பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் கே. ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

அவர், இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம் (Arvind Subramanian), ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதம் கடந்த காலங்களில் தவறாகக் கணக்கிடப்பட்டு (Misestimated) வருவதாக எழுதிய ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டினார்.

“அரவிந்த் சுப்பிரமணியத்தின் கட்டுரையில், 2014ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த பொருளாதார வளர்ச்சியையும், அதற்குப் பிறகான பொருளாதார வளர்ச்சியையும் ஒப்பிடுகிறார்.

யுபிஏ (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் வளர்ச்சி இருந்தது. அப்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது, அதேவேளையில் தனியார் முதலீடுகளும் உயர்ந்தன; ஏற்றுமதி உயர்ந்தது; தனியார் இறுதி நுகர்வுச் செலவு (Private Final Consumption Expenditure - PFCE), அதாவது நீங்களும் நானும் செய்யும் செலவு, உயர்ந்தது; மின்சார நுகர்வும் (Electricity Consumption) உயர்ந்தது.

இது மாதிரி 10, 15 அம்சங்கள் பொருளாதார வளர்ச்சி உயரும்போது அதுவும் உயருகின்றன. இவற்றின் வளர்ச்சிதான் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம்.

யுபிஏ ஆட்சிக் காலத்தில் இந்த வளர்ச்சிகள் அனைத்தும் ஒரே திசையில் இருந்தன. இப்போது மாறி மாறிச் செல்கின்றன. பொருளாதார வளர்ச்சி மட்டும் மேலே போகிறது; மற்ற அனைத்தும் கீழே போகின்றன.

பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அத்தனை அம்சங்களும் கீழே செல்லும்போது வளர்ச்சி மட்டும் எப்படி அதிகரிக்கிறது

இந்த ஆட்சியில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. முக்கியமாக, தனியார் முதலீடு, வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்டிஐ - FDI) கடந்த 10 ஆண்டுகளாக சரிந்திருக்கிறது. கடுமையாகக் குறைந்திருக்கிறது.

ஆனால், இங்கே உள்ள தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டில் செய்யக்கூடிய முதலீடு அதிகமாகியிருக்கிறது. உள்ளே வரும் எஃப்டிஐ-யைவிட, இங்கிருந்து வெளியே செல்லும் எஃப்டிஐ அதிகமாகிவிட்டது.

நம் நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யக்கூடிய சக்தி இருக்கிறது. ஆனால், இங்கே முதலீடு நடக்கவில்லை. ஏற்றுமதி சரிந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அத்தனை அம்சங்களும் கீழ்நோக்கிச் செல்லும்போது, வளர்ச்சி மட்டும் எப்படி அதிகரிக்கிறது என்பதுதான் அரவிந்த் சுப்பிரமணியம் எழுப்பிய கேள்வி.

ஜிடிபி கணக்கிடும் முறையை மாற்றியிருக்கிறார்கள் என்பதால், முந்தைய ஆண்டுகளின் கணக்கீடுகளோடு ஒப்பிட முடியாதுதான். ஆனால், பொருளாதாரம் வளரும்போது வளர வேண்டிய அம்சங்கள் எதுவும் வளராமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கோயம்பேடுக்கு சந்தைக்கு வருகிற காய்கறி 9% ஏறியிருக்கிறது. ஆனால் நாம் கடையில் வாங்கும் விலைவாசி 2% தான் ஏறியிருக்கிறதாம். இது வெறும் முரண்பாடு இல்லை. அரசு பொய் சொல்கிறது.

கணக்கிடும் முறை மாறினாலும், வளர்ச்சிக்கான காரணங்கள் மாறப்போவதில்லை. இவை குறையும்போது எப்படி வளர்ச்சி அடைய முடியும்?

கோவிட் காலம் முடிந்தபோது, ஜிடிபி வளர்ச்சி 3% ஆக ஜம்ப் ஆனது. முடங்கியிருந்த பல தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட்டதன் விளைவுதான் அது. ஆனால், அதற்குப் பிறகு பொருளாதாரம் சரிவில்தான் உள்ளது. கணக்கிடும் முறையை மாற்றி, 2.3% வளர்ச்சி அடைந்ததாகக் காட்டுகிறார்கள்.

அரசு சொல்லும் பல தரவுகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. விலைவாசி 2% தான் ஏறியிருக்கிறது என்கிறார்கள். மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் பணவீக்கம் (Wholesale Price Inflation) 8–9% என்கிறார்கள்.

அதாவது, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறியின் விலை 9% ஏறியிருக்கிறது. ஆனால், நாம் கடையில் வாங்கும் பொருட்களின் விலைவாசி 2% தான் ஏறியிருக்கிறதாம். இது வெறும் முரண்பாடு இல்லை. அரசு பொய் சொல்கிறது.

எரிபொருள் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது? பெட்ரோல், டீசல் என எல்லா விலையையும் தூக்குகிறது. பருப்பு, கீரை, எண்ணெய் எனத் தரையில் நகரும் ஒவ்வொரு பொருளின் விலையும் உயரும்.

இதுபோக, சர்க்கரை விலை 40% ஏறியிருக்கிறது. கேஸ் விலை உயர்வால் சின்னச் சின்ன கடைகள் எத்தனையோ மூடிவிட்டன. ஆனால், ரிசர்வ் வங்கி விலைவாசி 2–2.5% தான் ஏறியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. இது நம்பக்கூடியதாக இல்லை.

ரிசர்வ் வங்கி அரசுக்கு சங்கடமில்லாத அளவுக்குப் புள்ளிவிவரங்களைப் பொய்யாகப் புனைந்துதான் கொடுக்கிறார்கள்.

இவர்களுடைய (பாஜக) பொருளாதார ஆலோசகர்களாக இருந்தவர்கள்தான் அரவிந்த் சுப்பிரமணியமும் சுபாஷ் சந்திர கார்கும். அவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியும். அதனால்தான் தெளிவாக அரசின் ஏமாற்றுக்களைக் கேள்வி எழுப்புகிறார்கள்.” என்றார்.

GDP 7.8% வளர்ச்சி... மோடி அரசு பொய் சொல்கிறதா? வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி!
ராஜீவ் காதல் முதல் பிரதமர் பதவி வரை... சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக்கம்! பென்குயின் சிக்கல் தீர்ந்ததா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com