
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா அழைப்பின் பேரில், புத்த பவுர்ணமி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மகாமயா தேவி கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் சர்வதேச புத்த அமைப்பு சார்பில், லூம்பினியில் புதிதாக கட்டப்படவுள்ள புத்த மத கலாச்சார மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து அங்குள்ள இந்திய மக்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, புத்த பெருமானிடம் அவர் ஆசிபெறுவது போன்று, நபர் ஒருவர் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்டார்.
இதை தொடர்ந்து இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக நேபாளம் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் காத்மண்டு பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் லூம்பினி புத்த பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் அமர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புத்தர் மீது கொண்டுள்ள பக்தியும், நம்பிக்கையும் இரு நாடுகளையும் ஒரிழையில் பிணைப்பது ஒரே குடும்பத்தினராக நினைக்க செய்வதாக கூறியுள்ளார். புத்தர் உலகெங்கும் வாழும் மக்களுக்கு சொந்தக்காரர் என குறிப்பிட்ட மோடி, நேபாளம் இல்லாமல் ராமர் நிறைவு பெற்றவராக கருத இயலாது என கூறியுள்ளார்.