ராக்கெட் தயாராகியும் விண்ணில் பறக்காதது ஏன்? 2027-க்கு தள்ளிப்போன இந்தியாவின் புதிய முயற்சி!

ராக்கெட் தயாராக இருந்தும் ஏவுதல் ஏன் தள்ளிப்போகிறது? இதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன?...
ISRO Private Space Sector
ISRO Private Space Sector
Published on: 
Updated on: 
2 min read

இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் முதல் தனியார் தயாரிப்பு ராக்கெட்டின் ஏவுதல் மீண்டும் தாமதமாகியுள்ளது. முழுமையாகத் தயாராகிவிட்டதாகக் கூறப்படும் PSLV-N1 ராக்கெட், இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏவப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் தயாராக இருந்தும் ஏவுதல் ஏன் தள்ளிப்போகிறது? இதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன? இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இனி என்ன பங்கு இருக்கப்போகிறது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் முக்கியமான ராக்கெட்டுகளில் ஒன்று PSLV எனப்படும் துருவ செயற்கைக்கோள் ஏவுகணை. பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்த ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த ராக்கெட்டை உருவாக்குவதிலும், ஏவுவதிலும் இஸ்ரோ முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போது இந்தத் தயாரிப்புப் பணிகளில் தனியார் நிறுவனங்களையும் நேரடியாக ஈடுபடுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டமைப்புக்கு ஐந்து PSLV ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் ஒப்பந்தம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மூலம் சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ராக்கெட்டுகளுக்கான உதிரிபாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த தனியார் நிறுவனங்கள், இந்தத் திட்டத்தின் மூலம் முழு ராக்கெட்டையும் உருவாக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளன. அதாவது, பல்வேறு பாகங்களை ஒருங்கிணைத்து முழுமையான ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் தனியார் துறை நேரடியாக இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் ராக்கெட்டுதான் PSLV-N1.

ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டபடி, முதல் ராக்கெட் 2024ஆம் ஆண்டுக்குள் தயாராகியிருக்க வேண்டும். அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அடுத்தடுத்த ராக்கெட்டுகள் தயாரித்து வழங்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் முதல் ராக்கெட்டின் தயாரிப்பு மற்றும் ஏவுதல் கால அட்டவணை தொடர்ந்து தள்ளிப்போனது. தற்போது 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதனை ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாமதத்திற்கு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைப்புப் பணிகளை முடிப்பது, சரியான ஏவுதல் காலத்தைத் தேர்வு செய்வது போன்ற காரணங்கள் இருப்பதாக L&T நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஏ.டி. ராமச்சந்திரனி தெரிவித்துள்ளார். மேலும், ராக்கெட் தயாராக இருந்தாலும், இஸ்ரோவின் சமீபத்திய ராக்கெட் தோல்விகளும் ஏவுதல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ஏவப்பட்ட PSLV-C61 ராக்கெட்டும், 2026ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட்டும் திட்டமிட்ட இலக்கை அடையவில்லை. இரண்டு ராக்கெட்டுகளிலும் மூன்றாவது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. இதையடுத்து, கோளாறுகளுக்கான காரணங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சில உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களும் மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில், தனியார் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டை உடனடியாக ஏவுவதற்குப் பதிலாக, இஸ்ரோ தனது சொந்த PSLV ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்குப் பிறகே அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் தாமதம் தனியார் நிறுவனங்களின் தயாரிப்புத் திறன் குறித்த பிரச்சினை மட்டுமல்ல; விண்வெளி ஏவுதலின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடனும் தொடர்புடையது.

இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவில் விண்வெளித் துறையுடன் தொடர்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 440-ஐத் தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தின் மதிப்பும் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில், தற்போது இந்தியாவிடம் 56 விண்வெளிச் சொத்துகள் மட்டுமே சுற்றுப்பாதையில் உள்ளதாகவும், தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பூமி கண்காணிப்புக்காக இன்னும் பல செயற்கைக்கோள்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தேவையை அரசு நிறுவனங்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது என்பதால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தனியார் தயாரிப்பு PSLV வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், இந்திய விண்வெளித் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கும். எதிர்காலத்தில் செயற்கைக்கோள் தயாரிப்பு, ராக்கெட் உற்பத்தி, ஏவுதல் சேவைகள் எனப் பல துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், விண்வெளி ஆராய்ச்சி, சிக்கலான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் முக்கியமான தேசியத் திட்டங்களில் இஸ்ரோ தொடர்ந்து முன்னிலை வகிக்கும். இப்போது அனைவரின் கவனமும் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டை நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் தயாரிப்பு PSLV-N1 தனது முதல் பயணத்தில் வெற்றி பெறுமா என்பதே அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்