"இந்தியாவிற்கு புதிய தலைவலியாகிறதா சமையல் எண்ணெய்?" பிரதமர் நாட்டு மக்களுக்கு சொன்ன அந்த ஒரு விஷயம்!

மார்ச் 2026-ல் நிறைவடைந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 19.5 பில்லியன் டாலர்களை சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக செலவிட்டுள்ளது.
Cooking oil imports India
Cooking oil imports IndiaCooking oil imports India
Published on
Updated on
2 min read

இந்தியர்கள் தங்களின் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையால் அந்நிய செலாவணியில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் இந்த வேண்டுகோள் மத்திய அரசு சார்பில் விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது மற்றும் அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்துவது போன்ற ஆலோசனைகளையும் இந்திய பிரதமர் முன்வைத்திருந்தார். இந்த வேண்டுகோளுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, இந்தியாவின் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் இறக்குமதி செலவாகும். மார்ச் 2026-ல் நிறைவடைந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 19.5 பில்லியன் டாலர்களை சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக செலவிட்டுள்ளது.

உலக அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025-26ம் ஆண்டில் உலகளாவிய இறக்குமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா பெற்றுள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது. அமெரிக்க விவசாயத் துறையின் (USDA) தரவுகளின்படி, ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பொருளாதார வலிமை கொண்ட பகுதிகளும் இந்தியாவை விட பின்தங்கியுள்ளன.

1994-95ஆம் ஆண்டில், நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு வெறும் 5 சதவீதமாக மட்டுமே இருந்தது. வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள், 2024-25ஆம் ஆண்டு இந்தியா தனது தேவைகளில் 56 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருவதை காட்டுகின்றன. 2024ம் ஆண்டு வெளியான நிதி ஆயோக் அறிக்கையில், 1990களின் தொடக்கத்தில் இந்தியா சமையல் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. குறைந்த விலையில் கிடைத்த இறக்குமதி பொருட்கள், வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் பயன்பாட்டின் உயர்வு ஆகியவை தேவையை அதிகரித்தன. இதனால் உள்நாட்டு உற்பத்தி போதாமை நிலை உருவாகி, வெளிநாட்டு சந்தைகளின் மீதான சார்பு அதிகரிக்கத் தொடங்கியது. 2004-05ம் ஆண்டில் 38 சதவீதமாக இருந்த இறக்குமதி சார்பு, 2015-16ம் ஆண்டில் 63 சதவீதம் வரை உயர்ந்தது. பின்னர் அந்த அளவு குறைந்து, 2024-25ம் ஆண்டில் 56 சதவீதமாக பதிவாகியுள்ளது. சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிதி ஆயோக் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவின் மொத்த பயிரிடும் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துகள் 14.3 சதவீதம் இடம்பிடித்துள்ளன. ஆமணக்கு, குங்குமப்பூ, எள், நிலக்கடலை மற்றும் கடுகு போன்றவற்றின் முக்கிய உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இருப்பினும், சமையல் எண்ணெய் இறக்குமதியில் மூன்று வகைகள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. பாமாயில் 57 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சோயாபீன் எண்ணெய் 29 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 14 சதவீதமும் இடம்பெற்றுள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர்களின் சமையல் எண்ணெய் பயன்பாட்டு பழக்கத்திலும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் தரவுகளின்படி, 2001-02ம் ஆண்டிலேயே பாமாயில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட எண்ணெயாக இருந்தது. அப்போது அதன் பங்கு 29 சதவீதமாக இருந்த நிலையில், 2022-23ம் ஆண்டில் அது 37.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் துறைகளில் பாமாயில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் துரித உணவுகள், பேக்கரி பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் வளர்ச்சியும் இதன் தேவையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 2001-02ம் ஆண்டில் 3.1 சதவீதமாக இருந்த அதன் பங்கு, 2022-23ம் ஆண்டில் 11.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மறுபுறம், கடலை எண்ணெயின் பயன்பாடு 12 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், கடுகு எண்ணெயின் பயன்பாடும் 17 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக சரிந்துள்ளது. உலகளாவிய எண்ணெய் வித்து சாகுபடி பரப்பளவில் இந்தியா 15 முதல் 20 சதவீதம் வரை பங்கு பெற்றிருந்தாலும், விளைச்சல் திறனில் முன்னணி நாடுகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கிதான் உள்ளது.

நிதி ஆயோக் தரவுகளின்படி, 2020-2022 காலகட்டத்தில் இந்தியாவில் சோயாபீன் விளைச்சல் ஹெக்டேருக்கு ஒரு டன்னாக இருந்தது. அதேசமயம் அமெரிக்காவில் அது ஹெக்டேருக்கு 3.4 டன்னாக இருந்தது. இதேபோல், கடுகு விளைச்சல் ஜெர்மனியில் ஹெக்டேருக்கு 3.7 டன்னாகவும், பிரான்சில் ஹெக்டேருக்கு 3.3 டன்னாகவும் இருந்த நிலையில், இந்தியாவில் அது ஹெக்டேருக்கு 1.5 டன்னாக மட்டுமே இருந்தது. நிலக்கடலை விளைச்சலிலும் இதே இடைவெளி காணப்படுகிறது. அமெரிக்காவில் ஹெக்டேருக்கு 4.5 டன்னும், சீனாவில் ஹெக்டேருக்கு 3.9 டன்னும் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் அது ஹெக்டேருக்கு 1.8 டன்னாக மட்டுமே உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com